‘மல்லிப்பூ இட்லி’ உணவகத்தின் உரிமையாளர் இனியவன்தான், இதற்கான விதையைப் போட்டவர்.
இட்லியின் தாயகமாக தமிழ்நாடு இருக்கலாம். ஆனால், உலக இட்லி தினம் கொண்டாடப்படுவது குறித்து நம்மில் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மார்ச் 30 ஆம் தேதி, உலக இட்லி தினம் கொண்டாடப்படுகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளாக, மார்ச் 30 ஆம் தேதி, இட்லி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ‘மல்லிப்பூ இட்லி' உணவகத்தின் உரிமையாளர் இனியவன்தான், இதற்கான விதையைப் போட்டவர்.
இது குறித்து இனியவன் பேசுகையில், ‘சிறியவர் முதல் பெரியவர் வரை, அனைவருக்கும் ஏற்ற ஒரு பொதுவான உணவு இட்லிதான். தந்தை தினம், அன்னை தினம் என எல்லாவற்றுக்கும் ஒரு தினம் இருக்க, இட்லி குறித்தும் ஒரு தினம் இருக்க வேண்டும் என எண்ணினேன். இட்லிக்கென்று ஒருநாள் ஒதுக்கப்பட வேண்டும் என்று நினைத்தேன். அதன் நீட்சியே, மார்ச் 30, இட்லி தினமாக ஆனது' என தினத்துக்கான காரணம் குறித்து விளக்குகிறார்.
இது குறித்து பலருக்குத் தெரிந்திருக்கவில்லை என்பது ஆச்சரியமே. இல்லத்தரசி அம்ரிதா, ‘இட்லி தினம் என ஒன்று இருப்பது குறித்து இப்போதுதான் கேள்விப்படுகிறேன்' என்று வியக்கிறார்.
டிரைடென்ட் உணவகத்தின் பொது மேலாளர் பிரகாஷ் ஜெயதேவனுக்கும் இது குறித்து தெரிந்திருக்கவிலை. ‘நாளை இட்லி தினம் என்பது குறித்து இப்போதுதான் அறிகிறேன். நாளை எங்கள் உணவகத்தின் மெனுவில், இட்லி வகைகள் அதிகம் சேர்க்கப்படும்' என்றார்.
இட்லி ஃபேக்டரி நிறுவனத்தின் உரிமையாளர் ஆர்.யூ.ஸ்ரீநிவாஸ், ‘ஸ்விகி, சொமேட்டோ, உபர் ஈட்ஸ் நிறுவனங்கள் அடுத்த மூன்று நாட்களுக்கு இட்லி வகைகள் வாங்குவோருக்கு பல தள்ளுபடிகளை அறிவித்துள்ளன' என்று தகவல் தெரிவிக்கிறார்.
ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்வோருக்கு இட்லி ஃபேக்டரி நிறுவனம், உணவை சப்ளை செய்கிறது. தன் நிறுவனம் மூலம் விற்பனை செய்யப்படும் இட்லியின் விலை ரூ.30-லிருந்து ரூ.150 வரை இருக்கிறது என்கிறார் ஸ்ரீநிவாஸ்.
சாம்பார் இட்லிக்கு பெயர் போன ரத்னா கஃபே உணவகத்தில், இட்லி தினத்தையொட்டி எந்த தள்ளுபடியும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைப்போல முருகன் இட்லி கடை உணவகங்களிலும், இட்லி தினம் குறித்து எந்த கொண்டாட்டமும் இருக்காது என்றுதான் தகவல்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)Click for more
trending news