World Kidney Day: சிறுநீரகங்களின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவதற்காக சர்வதேச சிறுநீரக தினம் கடைபிடிக்கப்படுகிறது.
New Delhi: உலக சிறுநீரக தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினத்தில், சிறுநீரகங்களின் முக்கியத்துவம் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
ஆண்டுதோறும் மார்ச் மாதம் 2-வது வியாழக்கிழமையை சர்வதேச சிறுநீரக தினமாக கடைபிடிக்கின்றனர். அதன்படி இன்று சர்வதேச சிறுநீரக தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
''அனைவருக்கும் சிறுநீரகங்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்'' என்பது இந்த ஆண்டின் மையக்கருவாக உள்ளது. பீன்ஸ் வடிவில் உடலில் இருக்கும் சிறுநீரங்களில் ரத்தத்தில் இருந்து அசுத்தங்களை பிரித்தெடுக்கும் பணியை செய்கின்றன.
ஒரு நாளைக்கு சுமார் 400 தடவை இந்த வேலையை செய்வதாக கண்டறியப்பட்டுள்ளது. அதிக ரத்த அழுத்தம், நீண்ட நாள் சர்க்கரை வியாதி போன்றவை சிறுநீரகங்களை செயலிழக்க செய்யும் முக்கிய காரணங்கள்.
தேசிய சுகாதார மையம் வெளியிட்டுள்ள தகவலில், மரணத்திற்கு காரணமான 6-வது பிரச்னையாக சிறுநீரக செயலிழப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் சுமார் 85 கோடி பேருக்கு சிறுநீரக பாதிப்பு இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
சிறுநீரகத்தை பாதுகாக்க செய்ய வேண்டியவை...
ஒருவருக்கு சிறுநீரகம் நீண்டகாலம் நன்றாக செயல்பட வேண்டும் என்றால், அவர் உணவில் உப்பை குறைக்க வேண்டும். குடிப் பழக்கமும், புகைப்பழக்கமும் கிட்னியை பாதிக்கும்.
உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது சிறுநீரக செயலிழப்பை தடுக்கும். இதேபோன்று உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பதும் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம்.
எனவே, சிறுநீரகங்களின் மீது அக்கறை கொண்டவர்கள் அவ்வப்போது சர்க்கரை அளவு, உடல் எடை, ரத்த அழுத்தம் உள்ளிட்டவற்றை பரிசோதனை செய்து கொள்வது அவசியம். சிறுநீரகம் செயலிழந்து விட்டால் செயற்கை முறையில் உடலில் இருந்து சிறுநீர் பிரித்து எடுக்கப்படுகிறது. மத்திய அரசின் பிரதமர் தேசிய டயாலிசிஸ் திட்டத்தின் மூலம் குறைந்த செலவில் டயாலிசிஸ் செய்துகொள்ள முடியும்.