World Mosquito Day; August 20, 2019: மனிதர்களுக்கு பெரும்பாலான நோய்களை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காளியான கொசுக்களின் தினம் இன்று. வருடாவருடம் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி கொசுக்கள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. கொசுக்களுக்காக ஒரு நாள் கடைப்பிடிக்கப்படுவதன் நோக்கம் என்ன என்பதை நாம் சிந்திக்க வேண்டும். இந்த கொசுக்கள் இல்லாத இடம் ஏதும் இவ்வுலகில் இருக்க கூடுமோ? நம் இல்லங்களில், அலுவலகங்களில், பயணங்களில், தெருக்களில் என எங்கு சென்றாலும் நம்மை எந்நேரமும் இம்சிக்கக்கூடிய சிறு உயிரனம் தான் கொசு (Mosquito). உருவம் கண்டு எள்ளாமை வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் இக்கொசுக்கள் உருவத்தில் சிறிதாக இருந்தாலும், மலேரியா, சிக்குன் குனியா, யானைக்கால் நோய், ஜப்பானிய மூளைக்காய்ச்சல், டெங்கு, என்சிபாலிட்டிஸ், ஜிகா வைரஸ் போன்ற நோய்களை ஏற்படுத்துவதில் வல்லமை படைத்ததாக இருக்கிறது. மனிதர்களுக்கிடையில் நோயை பரப்பக்கூடிய அபாயகரமான இந்த கொசுக்களால் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் ஏழு லட்சம் பேர் நோய்வாய்ப்பட்டு இறக்க நேர்கிறதென்றால் உங்களால் நம்ப முடிகிறதா?? ஆம், அப்படிப்பட்டி கொசுக்களிடம் இருந்து எப்படி நம்மை காத்துக் கொள்வது என்பதை நாம் கட்டாயமாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
பாதுகாப்பு முறை (Safety Measures):
முதலில் வீட்டை சுத்தமாக வைத்து கொள்வது அவசியம். குப்பைகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் இருக்கும் இடங்கள் தான் கொசுக்களின் வசிப்பிடம். வீடுகளிலோ, வீட்டை சுற்றியோ சாக்கடை மற்றும் நீர்த்தேக்கங்கள் இருந்தால் அதனை சுத்தம் செய்யலாம். நீர்த்தேங்காமல் வடிவதற்கு வழிவகை செய்யலாம். வீட்டு ஜன்னல்களில் கொசுவலைகளை அடித்து கொசுக்கள் வீட்டிற்குள் வராமல் தடுக்கலாம். நாம் தண்ணீர் சேமிக்கும் தொட்டிகள் மூடப்பட்டிருக்கிறதா என்பதை அவ்வப்போது சோதித்து கொள்ளுங்கள். தற்போதைய தண்ணீர் தட்டுப்பாட்டால் வீட்டில் இருக்கக்கூடிய சிறுசிறு பாத்திரங்களில் கூட தண்ணீர் பிடித்து வைத்திருப்போம். அவற்றை சரியாக மூடி வைக்காவிட்டால் கொசுக்கள் முட்டையிட்டு பெருகிவிடும். வளர்ப்பு பிராணிகள் வைத்திருப்பவர்கள், அவற்றின் நீர்க்கலன்களை அடிக்கடி சுத்தம் செய்து வைக்கலாம். அதேபோல வீட்டில் இருக்கக்கூடிய குளிர்சாதன பெட்டி மற்றும் குளிரூட்டியிலிருந்து வெளியேறக்கூடிய நீரை அகற்றாமல் விட்டாலும் கொசுக்கள் பரவும். பருவக்கால மாற்றத்தின் போது கொசுக்கள் அதிகரிக்கும் என்பதால் வீட்டை சுற்றி தெளிப்பான்களை தெளிக்கலாம். இல்லாவிட்டால் உள்ளாட்சி அமைப்பின் உதவியை நாடலாம்.
சுவாரஸ்யமான தகவல்கள் (Facts):
* கொசு கடிக்கிறது என்போம். ஆனால் கொசுக்களுக்கு பற்கள் கிடையாது.
* வெறும் இரண்டே மாதத்தை தன் ஆயுட்காலமாக கொண்ட கொசு, டைனோசர் காலம் முதலே வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
* பொதுவாக பெண் கொசுதான் இரத்தத்தை குடிக்கும். இந்த பெண் கொசு ஒரே நேரத்தில் சுமார் 300 முட்டைகளை இடும் தன்மை கொண்டது.
* ஒரு மணி நேரத்திற்கு 1 முதல் 1.5 மைல்கள் மட்டுமே பறக்க முடிந்த கொசுக்களுக்கு ஆறு கால்கள் இருக்கிறது.
* உலகில் 3500க்கும் மேற்பட்ட கொசு இனங்கள் இருந்தாலும் அவற்றில் 200 முதல் 300 இனங்கள் மட்டுமே கடிக்கும் தன்மை கொண்டாக இருக்கிறது.
* மனிதர்கள் பயன்படுத்தக்கூடிய இரசாயன பூச்சிக்கொல்லிகளால் தற்போது தவளை இனங்கள் பெருமளவில் அழிந்துவிட்டன. கொசுக்களை உண்ணும் தவளைகள் குறைந்ததால் கொசுக்கள் பெருகிவிட்டது. இந்த கொசுக்கள் மனிதர்களை மட்டுமல்லாது பறவைகள் மற்றும் தவளைகளையும் கடிக்கும் தன்மை கொண்டதாக இருக்கிறது.
கொசுக்களை விரட்ட இயற்கை வழிகள் (Natural Remedies):
* வேப்ப இலைகளை காய வைத்து பின் வீட்டிற்குள் வைத்து எரிக்க வேண்டும். அந்த புகை வீட்டில் மூலைமுடுக்கெல்லாம் பரவும் வரை புகைக்க வேண்டும். வேப்ப இலையின் கசப்பு தன்மை கொசுக்களை விரட்டிவிடும்.
* 100 கிராம் சூடத்தை இடித்து, ஒரு பௌல் நிறைய தண்ணீரில் போட்டு அறையின் ஓரத்தில் வைத்தால் கொசுக்கள் குறையும். 2-3 நாட்களுக்கு ஒருமுறை இந்த நீரை மாற்ற வேண்டும். இதனை கீழே கொட்டி விட வேண்டாம். மாறாக வீடு துடைப்பதற்கு பயன்படுத்தலாம்.