பெரும்பாலும் ‘சிறப்பு தினங்கள்' எந்த ஒரு கொண்டாட்டத்திற்காகவும் அறிவிக்கப்படுவதில்லை. ஒரு காரணி அழிவில் இருக்கிறது என்றாலோ அல்லது மிகவும் கவனிக்கப்படாமல் இருக்கிறது என்றாலோ அவற்றின் பேரில் ஒரு நாளை சிறப்பு தினமாக அறிவிப்பதுதான் உலக இயல்பு. அப்படியாக ஒன்றிற்கு இன்று சிறப்பு தினம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு ஏன் சிறப்பு நாள் அறிவிக்கப்பட்டது?
கடல், மிகவும் கொடூரமானது என்று பலராலும் பரவலாகப் பார்க்கப்படுகிறது. அது 2004 ஆம் டிசம்பர் மாதத்தின் அதிகாலை வேளை. நாம் அனைவரும் இந்தக் கடலை மிகவும் கடுமையாக சாடிக்கொண்டிருந்தோம். எப்போதும் மிகவும் மென்மையாகவும், ஒரு நல்ல இசையை இசைத்தபடி கரைவந்து திரும்பிக்கொண்டிருந்த இந்தியப் பெருங்கடலின் அலைகள், ஆழிப்பேரலைகளாக உருவெடுத்தன. அப்படி ஒரு நிகழ்வை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். எங்கோ தூரத்தில் சுமத்ரா அருகில் ஏற்பட்ட ஒரு நில அதிர்வு. அதன் தாக்கம் இந்தியா வரை நீண்டது.
சுனாமியாக உருவெடுத்த இந்த நில அதிர்வு இந்தோனேசியா, இலங்கை, இந்தியா, தாய்லாந்து ஆகிய நாடுகளை மிகவும் கொடூரமாகத் தாக்கின. சுனாமியின் தாக்குதலால் 1,80,000 மேற்பட்டோர் இறந்து போனதாக, இந்த நாடுகள் அறிக்கை வெளியிட்டன. கடந்த இருபது ஆண்டுகளில் சுனாமியினால் மட்டும் ஏற்பட்ட பொருட்சேதம் 220 பில்லியன் டாலர்கள் என அறிக்கை வெளியிட்டுள்ளது பெல்ஜியத்தின் கதோலிக் பல்கலைக்கழகத்தில் உள்ள பேரழிவுகளின் பாதிப்புகளை ஆராயும் மையம். இந்த 20 ஆண்டுகளில், சுனாமி 2,50,000 மேலான மனித உயிர்களை காவு வாங்கியுள்ளது. கடந்த 20 வருடங்களில் நில அதிர்வு மற்றும் சுனாமியால் இந்த உலகில் ஏற்பட்ட பாதிப்பின் அளவு 661.5 பில்லியன் டாலர்கள்.
இன்று, உலக கடல் தினம் (ஜூன் 8). முன்பு கூறியதுபோல, அழிவிலும் ஆபத்திலும் இருக்கும் ஒன்றிற்குத்தான் சிறப்பு தினம். இவ்வளவு அழிவை ஏற்படுத்திய கடலுக்கு சிறப்பு தினம் கொண்டாடப்படுவது ஏன்? கடல் நமக்கு அழிவை ஏற்படுத்தியது என கூறும் நாம், கடலுக்கு எந்த ஒரு அழிவையும் ஏற்படுத்தவில்லையா?
உன்மையில் கடல் மிகவும் சாந்தமானது. இல்லையென்றால், நாம் செய்த இவ்வளவு தீங்குகளையும் தாங்கிக்கொண்டு, நமக்கு இந்த அளவு சிறிய சேதத்தை மட்டும் ஏற்படுத்தியிருக்காது. இவ்வளவு நேரம், கடல் நமக்கு இழைத்த சிறிய சேதங்களை பார்த்தோம். தற்போது, நாம் கடலுக்கு செய்த பெரிய பாவங்களை கணக்கெடுப்போமா...!
2016-ல் அறிமுகமான ஒரு துவக்கம் தான், 'பிரேக் ஃப்ரீ ஃப்ரம் ப்லாஸ்டிக்' (Break Free From Plastic). இந்த துவக்கம், 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 முதல் 15 தேதி வரை, 10,000 தன்னார்வளர்களை இணைத்து 42 நாடுகளில், 239 கடற்கரைகளில் பிளாஸ்டிக்கை அகற்றும் பணியில் ஈடுபட்டது. முதன்மையாக, அவர்கள் 1,87,000 பிளாஸ்டிக் துண்டுகளை சேகரிக்கிறார்கள். அவற்றை பிரித்துப் பார்க்கையில், 65 சதவிகிதமான பிளாஸ்டிக் பொருட்கள், பெப்சி, கொக்கோ-கோலா மற்றும் நெஸ்ட்லே ஆகிய நிறுவனங்களுக்கு மட்டும் சொந்தமானது. அவை அனைத்தும் நம்மால் பயன்படுத்தி வீசப்பட்டதுதான்.
இவர்கள் மேலும் சில தகவல்களையும் வெளியிட்டனர். 1950 ஆண்டு வரை 8.3 பில்லியன் மெட்ரிக் டன் பிளாஸ்டிக் உற்பத்தியாகியுள்ளது. அவற்றில் 9 சதவிகிதம் மறுசுழற்சி செய்யப்பட்டுள்ளது, 12 சதவிகிதம் எரித்து சாம்பாலக்கப்பட்டுள்ளது. ஆனால், மீதமுள்ள 79 சதவித பிளாஸ்டிக் குப்பையின் நிலை என்ன? அவை, இந்த சுற்றுச்சூழலில் தான் தவழ்ந்து கொண்டிருக்கிறது. இவற்றில், பெரும்பான்மை கடலில் மிதக்கிறது என அவர்கள் கூறுகிறார்கள். மேலும், தற்போதைக்கு ஆண்டு ஒன்றிற்கு 320 மில்லியன் மெட்ரிக் டன் பிளாஸ்டிக் குப்பைகள் உற்பத்தியாகின்றன. அடுத்த பத்து வருடங்களில், இவற்றின் அளவு 40 சதவிகிதம் வரை அதிகரிக்கும் எனவும் கூறுகிறார்கள்.
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரிலிருந்து 2750 கிலோமீட்டர் தொலைவில் அமைத்திருக்கிறது, அந்த 27 தீவுகள். மனிதர்கள் வாழாத இந்த தீவுகளை, 'ஆஸ்திரேலியாவின் சிதைக்கப்படாத சொர்க்கம்' என பெயரிட்டு சுற்றுலாவிற்காக அனுமதித்திருந்தது ஆஸ்திரேலிய அரசு. இந்த பகுதியில் பிளாஸ்டிக்கை அகற்றும் பணியில் ஈடுபடுகையில் 414 மில்லியன் பிளாஸ்டிக் துண்டுகள் சேகரிக்கப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலனவை ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்கள். இந்த தகவல்களை டாஸ்மானியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கடல் சூழலியலாளரான ஜெனிபர் லாவர்ஸ் (Jennifer Lavers) ஒரு அறிவியல் பத்திரிகையில் வெளியிடுகிறார்.
கோகோஸ் (Cocos Island) தீவும், அந்த 27 உறுப்பினர்களில் ஒரு பகுதி. இந்த தீவில் மட்டும், 17 டன்கள் அளவில் 38 மில்லியன் பிளாஸ்டிக் குப்பைத் துண்டுகளை எடுக்கிறார்கள். அந்த 27 தீவுகளிலும் மொத்தமாகவே 500 பழங்குடியினர் தான் வசிக்கின்றனர் என்பது தகவல். இவர்கள்தான், 238 டன் அளவிலான பிளாஸ்டிக் குப்பைகளை அந்த தீவுகளை சூழ்ந்துள்ள கடல்களில் மிதக்கவிட்டார்களா?
இவற்றின் விளைவு என்னவாக இருக்கும். கடந்த 25 ஆண்டுகளில், கடல் தனக்குள் உள்வாங்கிக்கொள்ளும் வெப்பத்தின் அளவு, முன்பு இருந்ததைவிட 60 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. அதாவது, இந்தனை ஆண்டுகள், கடல் வெப்பத்தை உள்வாங்கும் அளவு, கடந்த 25 அண்டுகளில் மட்டும் கிட்டத்தட்ட 1.5 மடங்காக அதிகரித்துள்ளது. இதற்கு 90 சதவிகிதக் காரணம், மனிதர்களும், அவர்களால் வெளியேற்றப்படும் கரியமில வாயுவும்தான் என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது, 'காலநிலை மாற்றத்திற்கான அரசாங்கங்களுக்கிடையேயான குழு' (Intergovernmental Panel on Climate Change - 'IPCC')
கடல், தனக்கென ஒரு நல்ல பன்பு ஒன்றை வைத்திருக்கிறது. நாம், அதற்கு எவ்வளவு தீங்கு செய்தாலும், அது நமக்கு நன்மைதான் செய்யும். கடல், சுற்றுச்சூழலில் உள்ள கரியமில வாயுவை உள்வாங்கிக்கொள்ளும் பன்பை கொண்டுள்ளது. ஆனால், இது எவ்வளவுக்கு எவ்வளவு வெப்பமடைகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு இந்த உள்வாங்கும் தன்மை குறைந்துவிடும்.
ஒரு புறம், நாம் அளவுக்கு அதிகமாக கரியமில வாயுவை வெளியிடுகிறோம், அது பூமியை வெப்பமாக்குகிறது. அதனால் கடலும் வெப்பமாகிறது. இதன் விளைவாக கடல் கரியமில வாயுவை உள்வாங்கிக்கொள்ளும் தன்மை குறைகிறது. சுற்றுச்சூழலில் கரியமில வாயுவின் அளவு அதிகரிக்கிறது. மீண்டும் நாம் கரியமில வாயுவை அளவிற்கு அதிகமாக வெளியிடுகிறோம். இது ஒரு தொடராக தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடலும் வெப்பமாகிக்கொண்டே இருக்கிறது.
இதன் தீவிரத்தைப் பற்றி பேசியுள்ள லரே ரெஸ்பிளாண்டி (Laure Resplandy), "கடல் வெறும் 30 அடி மட்டுமே ஆழம் கொண்டதாக இருந்தால் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பாருங்கள்!" எனக் கூறியுள்ளார்.
கடந்த 2018-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், 50-திற்கு மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள், நியூசிலாந்தின் கடற்பகுதியில் இறந்து கரை ஒதுங்கின. அந்த வாரத்தில் மட்டும் சுமார் 200 பைலட் திமிங்கலங்கள் இறந்து அங்கு கரை ஒதுங்கியிருக்கும். இதற்கு காரணம் என்னவென்று கேள்வி எழுப்பினால், கடல் நீரின் வெப்பம்தான் என்று பதிலளிக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
இந்த சம்பவம் நடப்பதற்கு ஒரு வாரம் முன்பு தான், ஸ்டீவர்ட் தீவில் 145 பைலட் திமுங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கியிருந்தன. இந்த சம்பவம் இப்போது மட்டும் நடக்கவில்லை. கடந்து நூற்றாண்டு முழுவதும் கடலின் வெப்பம் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. இதற்கு சான்று, 1918-ஆம் ஆண்டு, நியூசிலாந்தின் சதம் தீவில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய 1000 திமிங்கலங்கள்!
சமீப வாரங்களில் அமெரிக்காவின் மேற்கு கடற்கரைப் பகுதியில், சாம்பல் நிற திமிங்கலங்கள் கொத்துக் கொத்தாக இறந்து கரை ஒதுங்கியது. இதற்கு காரணமாக அறிவியலாளர்கள் குறிப்பிடுவது, கடல் நீர் வெப்பமடைதலைத்தான். என் ஓ ஏ ஏ (NOAA) எனப்படும் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம், "கலிபோர்னியாவில் இருந்து அலாஸ்கா வரையில் நீண்டுள்ள அமெரிக்காவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் மட்டும், இந்த ஆண்டில், இதுவரை, 58 சாம்பல் நிற திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கியுள்ளன." என்று கூறியுள்ளது.
அலாஸ்கா வளைகுடாவின் ஒரு பகுதியான டர்கெயின் ஆர்ம் என்னும், பனிப்பாறைகளாலான ஒரு கால்வாய் போன்ற இடத்தில், இந்த வாரத்தின் புதன்கிழமை அன்று ஒரு சாம்பல் நிற திமிங்கலம் இறந்து காணப்பட்டுள்ளது. கடந்த இரு வாரங்களில் மட்டும், இந்த பகுதியில் இறந்து காணப்படும் இரண்டாவது திமிங்கலம் இது. "குளிர் காலத்தில் தங்கள் வாழ்விடமாக கொண்டிருந்த மெக்சிகோவின் கடல் பகுதியில் இருந்து வடக்கு நோக்கி திமிங்கலங்கள் பயணிக்கையில், அங்குள்ள வெப்பத்தின் காரணமாக இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது" என்கிறார், என் ஓ ஏ ஏ-வின் செய்தித் தொடர்பாளர், மைக்கல் மில்ஸ்டெய்ன் (Michael Milstein).
இந்த பகுதிகள், கடந்த சில வருடங்களில் வெப்பமானது இரு துவங்களிலும் உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி, கடந்த 2016ஆம் ஆண்டில் இருந்து, கோடைகாலத்தில், என்றும் இல்லாத அளவு இந்த இடங்களில் நீர் வெப்பமாகியுள்ளது. மேலும், கடந்த 2018 ஆம் ஆண்டு, 150 வருடங்களில் இல்லாத அளவிற்கு குறைந்த அளவு வெப்பத்தை அடைந்துள்ளது. தட்பவெப்ப ஆராய்ச்சியாளர், ரிக் தாம்சன் (Rick Thomson) "அங்கு ஏற்பட்டுள்ள வெப்ப மாற்றங்களால், ஆல்கேயிலிருந்து க்ரில் (Krill) வரையிலான அனைத்து உயிரிங்களில் உணவுச் சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு என்பது, அங்குள்ள பல்லுயிர்ப் பெருக்கத்தின், அனைத்து உணவுச் சங்கிலிகளையும் பாதிக்கும் என்பது, கருத்தில் கொள்ள வேண்டிய விஷயம்'' என்கிறார்.
இவை அனைத்தும் கடல் வெப்பத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளின் ஒரு சிறிய பங்குதான். பல உயிர்கள் இந்த வெப்பத்தினால் இறந்தன, இறந்துகொண்டிருக்கின்றன. ஆனால், அது நம் கண் முன் நிகழவில்லை, அவ்வளவுதான். நான் முன்பு கூறியது போல கடல் மிகவும் சாந்தமானது. இல்லையென்றால், நாம் கடலுக்கும் அதன் உயிர்களுக்கும் செய்த இவ்வளவு தீங்குகளையும் தாங்கிக்கொண்டு, நமக்கு இந்த அளவு சிறிய சேதத்தை மட்டும் ஏற்படுத்தியிருக்காது.
இங்கே நாட்களை கொண்டாடுவதற்கு காட்டப்படும் அக்கறை, உயிர்களை காப்பாற்றுவதற்குக் காட்டப்படுவதில்லை. உலகின் முதல் உயிர் தோன்றியது கடலில்தான். ஆனால், இன்று அந்த கடலும், அங்கு தோன்றிய உயிர்கள் அழிந்துகொண்டிருக்கின்றன!