வானொலி தினத்தையொட்டி பிரபல மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் தீட்டியுள்ள மணற் சிற்பம்.
New Delhi: ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 13-ம்தேதியை உலக வானொலி தினமாக கொண்டாடி வருகிறோம். வானொலி ஒலிபரப்புச் சேவையைக் கொண்டாடவும், பன்னாட்டு வானொலியாளர்களுக்கிடையே கூட்டுறவை ஏற்படுத்தவும், முடிவெடுப்பவர்களை வானொலி, மற்றும் சமூக வானொலிகள் மூலமாக தகவல்கள் பரிமாற ஊக்குவிக்கவும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஐ.நா. சபையின் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனமான யுனெஸ்கோ, 2011 நவம்பர் 3-ம்தேதி உலக வானொலி தினத்தை அறிவித்தது.
முதலாவது உலக வானொலி நாள் இத்தாலி அமைந்துள்ள பீசா பல்கலைக்கழகத்தில் 2012 பிப்ரவரி 13 இல் கொண்டாடப்பட்டது. வானொலிகள் மூலம் குறைந்த செலவில் தகவல்களை உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டுமென்பதே இதன் நோக்கமாகும்.
2020 – ம் ஆண்டு வானொலி தினத்துக்கான மையக்கருத்து
- பொது, தனியார் மற்றும் சமூக ஒளிபரப்பாளர்களின் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி வானொலியில் பன்மைத்துவத்தை ஏற்றுக்கொள்வது.
- செய்தி அறையில் பிரதிநிதித்துவத்தை ஊக்கப்படுத்துதல், பல்வேறு சமூகக் குழுக்களை அணியில் இடம்பெறச் செய்தல்
- பன்மைத்துவம் வாய்ந்த தலையங்க உள்ளடக்கம் மற்றும் நிரல் வகைகளின் பன்முகத்தன்மையை ஊக்குவித்தல்
ஆகிய இம்மூன்றும் இந்தாண்டுக்கான வானொலி தினத்தின் மையக் கருத்துக்களாக அமைந்துள்ளன.
இன்றளவில் தொலைக்காட்சி, இணையம் என ஊடகம் பல்வேறு புதுமைகளுக்கு உட்பட்டபோதிலும், வானொலி என்பது பெரும்பான்மையோர் பயன்படுத்தும் ஊடகங்களில் ஒன்றாக உள்ளது. இந்தியாவின் பெரும்பான்மையான கிராமங்களில் மக்கள் வானொலியை பயன்படுத்திதான் அன்றாட தகவல்களை அறிந்து கொள்கின்றன.
இதன் வலிமையை உணர்ந்த பிரதமர் நரேந்திர மோடி, மாதந்தோறும் மன் கி பாத் நிகழ்ச்சி மூலமாக மக்களிடம் உரையாடி வருகிறார். சர்வதேச வானொலி தினத்தையொட்டி பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.