வாழ்க்கையின் மீது எப்பொழுதுமே பெரிய நம்பிக்கை கொள்ள வேண்டும்
World Suicide Prevention Day: ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 10 ஆம் தேதி உலக தற்கொலை முயற்சி தடுப்பு தினம் உலகளவில் அனுசரிக்கப்படுகிறது. தற்கொலை என்பது தனிநபர் ஒருவரை மட்டுமல்லாது அவரை சார்ந்தவர்களையும் பெரும் துன்பத்தில் தள்ளக்கூடியது. இன்பம், துன்பம், காதம், வெறுப்பு, குரோதம் போன்ற உணர்வுகள் நிறைந்ததுதான் இம்மனித வாழ்க்கை. நம் வாழ்வில் நிகழக்கூடியவற்றை திடமான மனதுடன் கடந்து செல்ல வேண்டும். மனதை பாதிக்கக்கூடிய விஷயங்களை குறைந்தபட்சம் எளிமையாக கடந்திடவாவது பழகிக் கொள்ள வேண்டும். வாழ்க்கை முழுவதுமே மகிழ்ச்சியான தருணங்கள் மட்டுமே நிறைந்திருக்க வேண்டும் என்றால் வாழ்வில் சுவாரஸ்யம் எப்படி இருக்கும்?? நிறைவான வாழ்க்கை என்பதுதான் இங்கு எல்லோருடைய கனவாக இருக்கிறது. அந்த கனவு மெய்ப்பட போராட வேண்டுமே தவிர துவண்டு போய் பின்வாங்கக்கூடாது. என் வாழ்க்கை இப்படியானதாக இருக்க வேண்டும் என்று கற்பனை செய்யவும், ஆசை கொள்ளவும் உங்களுக்கு எப்படி உரிமையுள்ளதோ அதேபோல, அவற்றை போராடி பெறவும் உரிமையுள்ளது என்பது நினைவில் கொள்ளுங்கள்.
நாம் தேர்ந்தெடுக்கக்கூடிய பாதைகளும் பயணங்களும் இனிமையானதாகவும், மென்மையானதாகவும் எப்போதும் அமைந்திடுவதில்லை. கரடு முரடான பாதைகளானாலும் கடக்க தயாராகிவிடுவதே இவ்வாழ்க்கைக்கான விழிப்புணர்வு. திடமான மனதுடன் தன்னை வெளிப்படுத்திக் கொள்பவர்களின் வாழ்க்கை சில நேரத்தில் தற்கொலையில் முடிகிறது. இரவு முழுவதும் நம்முடனே சுற்றித்திரிந்த நண்பன் விடியற்காலையில் தற்கொலை செய்து கொள்கிறான். எப்போதும் புன்சிரிப்புடன் எல்லோருக்கும் வணக்கம் சொல்லும் சக ஊழியர் திடீரென்று தற்கொலை செய்து கொள்கிறார். இப்படி, குடும்பம், அலுவலகம், தொழிலதிபர், நடிகர், விவசாயி, பள்ளிக் குழந்தைகள் என பாரபட்சமின்றி தற்கொலை சம்பவங்கள் ஆங்காங்கே நிகழ்ந்து கொண்டிருப்பது மிகவும் வருத்தத்திற்குரிய ஒன்றாக இருக்கிறது.
நாம் தற்போது வாழக்கூடிய வாழ்க்கை முறை மற்றும் சூழல் முற்றிலும் மாறுபட்டதாகிவிட்டது. மனிதர்களின் தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு மின்னனு உபகரணங்களும், செயலிகளும் வாழ்க்கையை ஆக்கிரமித்துவிட்டன. நமக்குள் நமக்கிருக்கும் தொடர்பே துண்டிக்கப்பட்டிருப்பதுதான் உண்மை நிலவரம். நிறைய மனிதர்களிடம் பழகும்போதுதான் நிறைய அனுபவங்கள் பகிரப்படுகிறது. அந்த அனுபவங்கள் மனிதரின் மனதை பக்குவப்படுத்துகிறது. தோல்வியின் வலியும் கடந்து வரக்கூடிய மனநிலை பற்றியும் ஒரு தெளிவு பிறக்கிறது. அந்த தெளிவானது தோல்விகள், ஏமாற்றங்கள், இழப்புகள், துன்பங்கள் ஆகியவற்றை கடந்து செல்ல உதவுகிறது.
இவை அனைத்திற்கும் காரணம் மனம். மனதை நாம் பக்குவப்படுத்திக் கொள்வதை பொருத்துதான் நம் வாழ்க்கை அமைகிறது. இந்தியாவில் தற்கொலை விகிதம் அதிகமுள்ள மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாம் இடம் வகிக்கிறதென்பதே வேதனைக்குரிய விஷயமாக இருக்கிறது. ஆண்டுதோறும் உலகளவில் லட்சக்கணக்கானோர் தங்கள் உயிரை தாங்களே மாய்த்து கொள்கிறார்கள். தற்கொலைகளை தடுக்கவும் அதுகுறித்த விழிப்புணர்வை உலக மக்களுக்கு ஏற்படுத்தும் நோக்கில் உலக சுகாதார அமைப்பும், தற்கொலை தடுப்பிற்கான சர்வதேச அமைப்பும் இணைந்து செயல்பட்டு வருகிறது. தற்கொலைக்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள் குறித்து மனநல மருத்துவர் ஜெய்குமாரை NDTV தமிழ் தொடர்பு கொண்டது.
வருடாவருடம் உலகளவில் தற்கொலைகள் அதிகரித்து கொண்டேதான் இருக்கிறது. ஒருமனிதன் தற்கொலை செய்து கொள்ள குடும்பம், சமூகம் போன்றவை முக்கிய காரணமாக இருக்கிறது. பெண்களை காட்டிலும் ஆண்களே தற்கொலை முயற்சியில் அதிகபடியாக ஈடுபடுவது தெரிய வந்துள்ளது. எந்த ஒரு விஷயத்திலும் நடுநிலைத் தன்மை இல்லாதிருத்தலும், ஒழுக்கம், மானம் போன்ற சமூக வரையறைகளும், போதனைகளும் தற்கொலைக்கு காரணங்களாக இருக்கிறது. குறிப்பாக தமிழ் சமூத்தில் இவை அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது.
காரணங்கள்:
மன அழுத்தம், காதல் தோல்வி, பரிட்சையில் தோல்வி, வேலையின்மை, குடும்ப பிரச்னை, நிறைவேறாத ஆசைகள், பிரச்னைகளை எதிர்கொள்வதில் பயம், தீராத நோய்கள், அவமானத்தை ஏற்படுத்தும் சூழ்நிலைகள், சமூக பிரச்னைகள், கடன் தொல்லை, பொருளாதார பிரச்னை, வரதட்சணை கொடுமை, குற்ற உணர்வு ,தனிமைப்பட்டிருத்தல், மது அருந்துதல் மற்றும் உளவிய சிக்கல் போன்றவை தற்கொலைக்கான காரணங்களாக இருக்கிறது.
முறைகள்:
தற்கொலை செய்து கொள்பவர்கள் பெரும்பாலானோர் பூச்சி கொல்லி மருந்துகளையே உட்கொள்கின்றனர். கிராமங்களில் சகஜமாக நிகழக்கூடியது இது. அதிர்ச்சி தரக்கூடிய தகவல் என்னவென்றால் தற்போது தற்கொலை செய்து கொள்பவர்கள் பூச்சி கொல்லி மருந்துகளை ஆன்லைனில் ஆர்டர் செய்வதுதான். தூக்க மாத்திரைகளை அதிகமாக உட்கொள்வது, தூக்கிடுதல், நீர் நிலைகளில் மூழ்குதல், நெருப்பு வைத்து கொள்வது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டு தன்னைத்தானே அழித்து கொள்கிறார்கள். அடுக்குமாடியின் உச்சியில் இருந்து குதிப்பது சமீபத்திய தற்கொலை ட்ரெண்டாகி இருக்கிறது.
தீர்வு:
ஒவ்வொரு மனிதர்களுக்கும் சுயக்கட்டுப்பாடு மிகவும் அத்தியாவசியமானது. சுயமதிப்பீடு அதிகமாக இருக்கும்போது தாழ்வு மனப்பான்மை இருக்காது. நிறைய ஆக்கப்பூர்வமான விஷயங்களை கற்றுக் கொள்ளும்போது தானாகவே சுயமதிப்பீடு அதிகரிக்கும். மனிதர்களுடனான நல்லிணக்கத்தை அதிகரிக்க வேண்டும். நேர்மறையான எண்ணங்கள் கொண்ட மனிதர்களை கண்டறிந்து அவர்களுடன் பயணிக்க வேண்டும். தனிமையை தவிர்த்து குடும்பத்துடன் அல்லது நண்பர்களுடன் நேரத்தை செலவிடலாம். அது உங்களுக்கு நிறைய உவப்பான தருணங்களை கொடுத்திடும். தியானம், உடற்பயிற்சி போன்றவற்றை செய்து உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்து கொள்ளலாம். மனதிற்கு இனிமையான செயல்களில் ஈடுபடலாம். மனநல மருத்துவரை அணுகி அலோசனை பெற்றால் இன்னும் சிறப்பு.
பிற செய்திகள்:
தற்கொலைகளை தடுக்க, அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். மருந்துகள், பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றை பயன்பாட்டில் இருந்து ஒதுக்கி வைக்கலாம். தற்கொலை எண்ணம் தோன்றும் போது, அவர்களுக்கு ஆதரவாக பேச அரசாங்கமே வழிவகை செய்துள்ளது. 104 என்ற எண்ணிற்கு அழைத்து பேசினால் தற்காலிகமாக தற்கொலை எண்ணத்தை போக்க உதவுவார்கள். அதுதவிர பல தனியார் நிறுவனங்களும் தற்கொலைகளை தடுக்க மனநல ஆலோசனை செய்து வருகிறது. அவர்களை அணுகலாம் என்கிறார் மருத்துவர் ஜெய்குமார்.
வாழ்க்கையின் மீது எப்பொழுதுமே பெரிய நம்பிக்கை கொள்ள வேண்டும். அடுத்து நொடி என்ன நடக்கும் என்று தெரியாத சுவாரஸ்யமான விளையாட்டுதான் வாழ்க்கை. தன்னை தானே நேசித்திட வேண்டும். பிறருக்காக வாழ்வதை தவிர்த்து உங்களுக்காக வாழ துவங்குங்கள். அதில் கிடைக்கக்கூடிய நிம்மதியும், மன மகிழ்ச்சியும் அலாதியானது. இவ்வாழ்க்கை நமக்கு கிடைத்த வரப்பிரசாதம். நம்பிக்கையுடன் வாழ்வோம்...!!