This Article is From Mar 15, 2019

சிபிஎம் சார்பில் மதுரையில் களமிறங்குகிறார் எழுத்தாளர் சு.வெங்கடேசன்!

தமிழகத்தில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிபிஎம் கட்சிக்கு, கோவை மற்றும் மதுரை நாடாளுமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

சிபிஎம் சார்பில் மதுரையில் களமிறங்குகிறார் எழுத்தாளர் சு.வெங்கடேசன்!

இரண்டு தொகுதிகளிலும் கட்சி சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்பது குறித்து அறிவித்துள்ளார் சிபிஎம் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன்

தமிழகத்தில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிபிஎம் கட்சிக்கு, கோவை மற்றும் மதுரை நாடாளுமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் இரண்டு தொகுதிகளிலும் கட்சி சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்பது குறித்து அறிவித்துள்ளார் சிபிஎம் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன். 

இன்று சென்னையில் உள்ள சிபிஎம், தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் பாலகிருஷ்ணன், ‘எங்கள் மாநிலக் குழு இந்த முறை எங்கள் கட்சி சார்பில், திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்டிருக்கும் இரண்டு தொகுதிகளில் யார் போட்டியிடுவர் என்று தீர்மானித்தது. அந்தப் பட்டியலை எங்கள் கட்சியின் தேசிய தலைமைக்கு அனுப்பி வைத்தோம். அதன்படி கோயம்புத்தூரில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், 50 ஆண்டுகளுக்கு மேல் கட்சி சேவையில் ஈடுபட்டிருப்பவருமான பி.ஆர்.நடராஜன் போட்டியிட உள்ளார்.

தமிழ மக்களுக்காகவும், தமிழ் மொழிக்காகவும் பல செயல்களை செய்து வருபவரும், ‘வீரயுக நாயகன் வேல்பாரி' என்ற புத்தகம் எழுதி உலக புகழ் பெற்றவருமான சு.வெங்கடேசன், மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்' என்றார்.

அவர் தொடர்ந்து பொள்ளாச்சி விவகாரம் குறித்து பேசுகையில், ‘தமிழகமே திகைத்துப் போகும் அளவுக்கு பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமை நடந்துள்ள போதும், அது குறித்து தமிழக முதல்வர் இதுவரை திருவாய் மலர்ந்து எந்த கருத்தையும் சொல்லவில்லை. அது மிகவும் கண்டிக்கத்தக்கது. அவரின் மவுனம் ஆளுங்கட்சி நபர்களின் கைகள் இந்த விவகாரத்தின் பின்னணியில் இருக்குமோ என்று சந்தேகத்தைக் கிளப்புகிறது' என்று வருத்தம் தெரிவித்தார். 

 

மேலும் படிக்கதிமுக கூட்டணியில் யார் யாருக்கு எந்தெந்த தொகுதிகள்..?- பட்டியல் வெளியீடு

.