This Article is From Aug 02, 2019

2 முறை நீட் தேர்வு எழுதியும் மருத்துவ படிப்பில் சேர முடியாததால் விரக்தி.. மாணவி தற்கொலை!

ஓராண்டுகளாக பயிற்சி எடுத்து இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதினார். ஆனால் அதிலும், 384 மதிப்பெண்களை மட்டுமே பெற்றார். இதனால், இந்த ஆண்டும் கீர்த்தனாவால் மருத்துவப்படிப்பில் சேர முடியாமல் போனது.

Advertisement
தமிழ்நாடு Written by

இரண்டு முறை நீட் தேர்வு எழுதியும் மருத்துவ படிப்பில் சேர முடியாத விரக்தியில், பெரம்பலூரை சேர்ந்த மாணவி ஒருவர் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்புகள் இருந்தும், 3 ஆண்டுக்கும் மேலாக நீட் தேர்வுக்கு விலக்கு பெறமுடியாத நிலை உள்ளது. நீட் தேர்வில் தோல்வி அடைந்து தனது மருத்துவ கனவு நிறைவேறாத விரக்தியில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி அனிதா (19) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

அவரை தொடர்ந்து, ஒவ்வொரு வருடமும் நீட் தேர்வு முடிவுகள் வரும் போது, மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருகிறது. தமிழகத்தில் இதுவரை அனிதாவுடன் சேர்ந்து, 5 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 

இந்நிலையில் நீட்தேர்வு தோல்விக்கு 6வது மாணவியாக பெரம்பலூரை சேர்ந்த கீர்த்தனா என்பவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் செல்வராஜ் அரசு போக்குவரத்து கழக நடத்துனராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது மகளான கீர்த்தனா கடந்த ஆண்டு பிளஸ்-2 தேர்ச்சி பெற்று, 1053 மதிப்பெண்களை பெற்றிருந்தார். அந்த ஆண்டே மருத்துவ படிப்பில் சேர்வதற்காக நீட் தேர்வு எழுதி 202 மதிப்பெண்கள் பெற்று தோல்வியடைந்தார். இதனால், மருத்துவபடிப்பில் சேரமுடியவில்லை. 

Advertisement

இதைத்தொடர்ந்து, மனம் தளராத கீர்த்தனா சென்னையில் உள்ள நீட் தேர்வுக்கான பயிற்சி மையத்தில் சேர்ந்து, ஓராண்டுகளாக பயிற்சி எடுத்து இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதினார். ஆனால் அதிலும், 384 மதிப்பெண்களை மட்டுமே பெற்றார். இதனால், இந்த ஆண்டும் கீர்த்தனாவால் மருத்துவப்படிப்பில் சேர முடியாமல் போனது. 

இந்நிலையில், மருத்துவபடிப்பில் சேர முடியாத விரக்தியில் இருந்த கீர்த்தனா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகள் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த பெற்றோர் கதறி துடித்தனர். இதைத்தொடர்ந்து, கீர்த்தனாவின் தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Advertisement