+2 பாடப் புத்தகத்தில் திருத்தம் செய்ய அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை
கடும் எதிர்ப்பை தொடர்ந்து, தமிழின் தொன்மை குறித்த தவறான பகுதி நீக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் புதிதாக பாடத் திட்டம் உருவாக்கப்பட்டு பாடப்புத்தக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், தேசிய கீதம் தவறாக குறிப்பிடப்பட்டும், பாரதியார் காவி தலைப்பாகை அணிந்திருப்பது போல் படம் இடம்பெற்றும் சர்ச்சைகள் கிளம்பின. தற்போது தமிழை விட சமஸ்கிருதமே தொன்மையான மொழி என மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள 12ஆம் வகுப்பு ஆங்கில பாடப்புத்தகத்தில் கி.மு. 300 ஆண்டுகள் பழமையான மொழி தமிழ் என்றும், கி.மு. 2000 ஆண்டுகள் பழமையானது சமஸ்கிருதம் என்றும் அச்சடிக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழி 5000 ஆண்டுகள் பழமையானது என தமிழ் ஆர்வலர்கள் கூறி வரும் நிலையில், 2,300 ஆண்டுகள் பழமையானது என குறிப்பிடப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதவில், எப்படிச் சகிப்பது இக்கொடுமையை? தமிழ் 2300 ஆண்டுகள் தான் பழமை வாய்ந்ததாம். ஆனால், சமஸ்கிருதமோ 4000 ஆண்டுகள் பழமையானதாம். இப்படித்தான் சொல்கிறது தமிழக அரசின் 12-ஆம் வகுப்பு பாடப்புத்தகம். காவியை பூசிக் கொள்பவர்கள் ஆட்சியில் இதுதானே நடக்கும்? இது தமிழக அரசா அல்லது சமஸ்கிருத சர்க்காரா?” என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதனிடையே, சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறும்போது, தமிழை சமஸ்கிருதத்திற்கு பின்னால் தோன்றிய மொழி என்று இளைய தலைமுறைக்கு தவறான வரலாற்றை பதிவு செய்யும் நோக்கில் பாட்டத்திட்டத்தை வாக்குத்தவர்கள் யார் என்று கண்டறிந்து அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உண்மைக்கு மாறாக வரலாற்றை பதிவு செய்த அந்த பாடத்திட்டத்தை மாற்றி வரலாற்று உண்மையை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், ப்ளஸ் 2 பாடப்புத்தகத்தில் தமிழின் தொன்மை குறித்து தவறாக குறிப்பிடப்பட்டதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வேலூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ப்ளஸ் 2 பாடப் புத்தகத்தில் திருத்தம் செய்ய அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.