This Article is From Jul 30, 2018

அபாயக் கட்டத்தை நெருங்கியதால், யமுனைப் பாலம் மூடப்பட்டது!

27 பாசஞ்சர் ரயில்கள் ரத்து செய்யப்படுள்ளதாகவும், மூன்று ரயில்களின் பயண தூரம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் வடக்கு இரயில்வே செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்

அபாயக் கட்டத்தை நெருங்கியதால், யமுனைப் பாலம் மூடப்பட்டது!
New Delhi:

யமுனை ஆற்றில் நீரின் அளவு அபாயக்குறியைத் தாண்டியதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழைய யமுனா ரயில் பாலத்தில் நேற்று நள்ளிரவு முதல் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாக வடக்கு இரயில்வே தெரிவித்துள்ளது.

ஆற்றில் நீரின் அளவு 205.53 மீட்டரைத் தொட்டதும் நேற்று நள்ளிரவு 12:20 மணிக்கு பழைய யமுனா பாலத்தில் (லோஹா புல்) தற்காலிகமாகப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. நீரின் அளவு அபாய அளவைத் தொட்டதும் பாலத்தை மூடுவதற்கான உத்தரவு டெல்லி போலீஸாரால் ஞாயிறு இரவு 8.25-க்குப் பிறப்பிக்கப்பட்டது. வடக்கு இரயில்வே செய்தித்தொடர்பாளர் நிதின் சௌத்ரி, “27 பயணிகள் இரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 14 விரைவு இரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. 3 இரயில்களின் தூரம் குறைக்கப்பட்டுள்ளது” என இதைப்பற்றி தெரிவித்தார்.

நேற்று காலையே தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த மக்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டார்கள். அக்‌ஷர்தம், பாண்டவ் நகரைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளுக்கு வந்த டெல்லி துணை முதல்வர் மனீஷ் சிசோதியா அங்குள்ள மக்களை வேறு பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வலியுறுத்தினார்.

ஹரியானாவின் ஹத்ணிகுண்ட் தடுப்பணையில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டதாலும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வந்ததாலும் ஞாயிறன்று யமுனையின் அளவு 205.50 மீட்டர் வரை உயர்ந்தது. செவ்வாய் அன்று இது 206.60 மீட்டர் அளவைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹரியானா சனிக்கிழமை ஆறு மணியளவில், ஆறு இலட்சம் கன அடி நீரினைத் திறந்து விட்டது. டெல்லிக்கு குடிநீரினை வழங்கும் ஹத்ணிகுண்ட் தடுப்பணையில் இருந்து திறந்து விடப்படும் நீர் பொதுவாக மாநகரினை வந்தடைய 72 மணி நேரங்கள் எடுத்துக்கொள்ளும்.

பாதுகாப்புப் பணிகள் தீவிரம்:

கிழக்கு டெல்லி மாவட்ட மாஜிஸ்டிரேட் மகேஷ் அவர்களும் தாழ்வான பகுதிகளைப் பார்வையிட்டார். நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், எந்த நெருக்கடியையும் சமாளிக்க அரசு தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

23 இடங்களில் 67-க்கும் அதிகமான படகுகள், மக்களை மீட்க தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்றும், பாதிக்கப்பட்ட மக்களை பள்ளி வளாகங்களிலும் வேறு சில இடங்களுக்கு கொண்டு சேர்க்க, முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் தயார் நிலையில் உள்ளனர். கிழக்கு மண்டலத்தில் உள்ள ஆயிரம் குடும்பங்கள் தங்குவதற்காக 750 கூடாரங்களை அமைத்து, உணவுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆற்றுப்படுகையின் அருகில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அருகிலுள்ள மேடான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

டெல்லி முதலமைச்சர் சனிக்கிழமை அன்று வெள்ள அபாயத்தை எதிர்கொள்வது குறித்தான கூட்டத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நடத்தினார். மேலும் இராணுவத்தைத் தயார் நிலையில் இருக்குமாறும் அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப் பட்டிருக்கிறார்.

.