This Article is From Aug 06, 2019

“பாஜக, ராஜீவ் காந்தியையே மிஞ்சிடும்…”- 370வது சட்டப்பிரிவு ரத்து பற்றி மாஜி அமைச்சர் கருத்து!

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து சட்டப் பிரிவு ரத்தானது குறித்தான உத்தரவில் நேற்று காலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கையெழுத்திட்டார்

அரசு, காஷ்மீர் விவகாரத்தில் மிகவும் தன்னிச்சையாகவும் எதேச்சதிகார போக்குடனும் நடந்து கொண்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

ஹைலைட்ஸ்

  • '370வது சட்டப் பிரிவு ரத்து, அரசியல் ஆதாயத்துக்காக செய்யப்பட்டது'
  • தேர்தலில் ஜெயிப்பதற்கே இந்த முடிவு- சின்கா
  • பணமதிப்பிழப்பு போலவேதான் இந்த நடவடிக்கையும் - சின்கா
New Delhi:

ஜம்மூ காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து சட்டப் பிரிவு 370-ஐ ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது மத்திய அரசு. இது பற்றி முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா, “மக்கள் மத்தியில் காஷ்மீர் குறித்தான முடிவு வரவேற்பைப் பெற்றுள்ளதால், இப்போது மட்டும் தேசிய தேர்தல் நடத்தப்பட்டால், 1984 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி பெற்ற வெற்றியைவிட பெரும் வெற்றியை பாஜக பெறும்” என்று கூறியுள்ளார்.

1984 ஆம் ஆண்டு, இந்திய பிரதமராக இருந்த இந்திரா காந்தி, படுகொலை செய்யப்பட்ட பிறகு நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. அந்தத் தேர்தலை காங்கிரஸ், ராஜீவ் காந்தி தலைமையில் எதிர்கொண்டது. அதில் 400 இடங்களுக்கு மேல் கைப்பற்றி வரலாற்று வெற்றியைப் பெற்றார் ராஜீவ். இதைத்தான் சின்கா, சுட்டிக்காட்டியுள்ளார். 

அவர் மேலும், “இந்த முடிவு முழுக்க முழுக்க அரசியல் ஆதாயத்துக்காக எடுக்கப்பட்டது. இந்த முடிவு ஜம்மூ காஷ்மீரைப் பொறுத்தது அல்ல. அடுத்தடுத்த பல மாநிலத் தேர்தல்கள் வர உள்ளன. அவற்றை மனதில் வைத்துதான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டும் இதைப் போன்றுதான் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த முடிவு பல பொருளாதார வல்லுநர்களால் விமர்சனம் செய்யப்பட்டது. ஆனால், மக்கள் அந்த முடிவை ஏற்றுக் கொண்டனர். அதைப் போலத்தான் காஷ்மீர் விவகாரமும் மாறப் போகிறது. இது காஷ்மீரை மனதில் வைத்து எடுத்திருந்தால், அந்த மாநில மக்களை கருத்தில் கொண்டிருக்க வேண்டும் அல்லவா” என்றுள்ளார். 

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து சட்டப் பிரிவு ரத்தானது குறித்தான உத்தரவில் நேற்று காலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கையெழுத்திட்டார். கடந்த சில வாரங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்த பாதுகாப்புப் படையினர் காஷ்மீருக்கு கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்தின் முன்னணி அரசியல் தலைவர்கள் பலர் சிறை வைக்கப்பட்டுள்ளனர். அரசு, காஷ்மீர் விவகாரத்தில் மிகவும் தன்னிச்சையாகவும் எதேச்சதிகார போக்குடனும் நடந்து கொண்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

.