This Article is From Oct 20, 2018

'சபரிமலை வன்முறைக்கு ஆர்.எஸ்.எஸ் தான் காரணம்!’- கொதிக்கும் யெச்சூரி

சிபிஎம் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, ‘சபரிமலை வன்முறைக்கு ஆர்.எஸ்.எஸ் தான் முழுக் காரணம்’ என்று குற்றம் சாட்டியுள்ளார்

'சபரிமலை வன்முறைக்கு ஆர்.எஸ்.எஸ் தான் காரணம்!’- கொதிக்கும் யெச்சூரி

சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்பட்டு 4 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், இன்னும் ஒரு இள வயது பெண் கூட கோயிலுக்குள் செல்ல முடியவில்லை. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள சிபிஎம் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, ‘சபரிமலை வன்முறைக்கு ஆர்.எஸ்.எஸ் தான் முழுக் காரணம்' என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் விரிவாக பேசுகையில், ‘சமூக அமைதியைக் குலைத்து வாக்கு வங்கியை சேர்க்கும் நோக்கில் சபரிமலையில் வன்முறை அரங்கேற்றப்பட்டு வருகிறது. சபரிமலைக்கு செய்தி சேகரிக்க சென்றிருந்த ஊடக நிறுவன வாகனங்கள், பெண் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது பாபர் மசூதி இடிப்பின் போது நடந்தது போலவே இருக்கிறது. அப்போதும் தலையில் காவி நிற பேன்ட் மற்றும் காவி நிற உடை அணிந்திருந்தவர்கள் தான், பாபர் மசூதி இடிப்பில் ஈடுபட்டிருந்தனர். தற்போது சபரிமலையில் வன்முறையில் ஈடுபட்டுள்ளவர்களும் அதே உடையைத் தான் அணிந்துள்ளார்கள்.

பாபர் மசூதியில் நிகழ்த்தியதை சபரிமலையிலும் அரங்கேற்றப் பார்க்கிறது ஆர்.எஸ்.எஸ். அங்கு நடக்கும் வன்முறைக்கு அவர்கள் தான் முழுப் பொறுப்பு' என்று கொதிப்புடன் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 28 ஆம் தேதி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, 10 முதல் 50 வயதுக்கு இடையில் இருக்கும் பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு நுழையக் கூடாது என்றிருந்த நடைமுறைக்கு முடிவுகட்டித் தீர்ப்பளித்தது.

இதையடுத்து கடந்த புதன்கிழமை சபரிமலை கோயிலின் நடை திறக்கப்பட்டது. அப்போதிலிருந்து பல பெண்கள் கோயிலுக்குள் செல்ல முயன்று வருகின்றனர். ஆனால், அங்கு கூடி இருக்கும் போராட்டக்காரர்கள் அவர்களை கோயிலுக்கு உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.