This Article is From Feb 28, 2019

விமானப்படை அதிரடி தாக்குதலால் பாஜக-வுக்கு சாதகம்: எடியூரப்பா சர்ச்சை பேச்சு

நேற்று எதிர்கட்சித் தலைவர்கள் டெல்லியில் சந்தித்து, ‘ஆளுங்கட்சி இந்த விவகாரத்தை அரசியலாக்கி வருகிறது’ என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளன

செவ்வாய் கிழமை அதிகாலை 3.30 மணிக்கு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

‘இரு நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் இருக்கும் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை நடத்திய அதிரடி தாக்குதலால், பிரதமர் மோடிக்குச் சாதகமாக அலை வீசுகிறது. இதனால், இந்த முறை லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் இருக்கும் 28 இடங்களில் பாஜக 22 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும்' என்று சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார் முன்னாள் முதல்வர் எடியூரப்பா. 

இது குறித்து எடியூரப்பா மேலும் பேசுகையில், ‘நாளுக்கு நாள் பாஜக-வுக்கு சாதகமாக சூழல் மாறி வருகிறது. எல்லைத் தாண்டி தீவிரவாத முகாம்களை இந்தியா அழித்ததால் மோடிக்குச் சாதகமான அலை நாட்டில் வீசுகிறது. இதன் தாக்கம் வருகின்ற லோக்சபா தேர்தலில் எதிரொலிக்கும். 

இதன் மூலம் கர்நாடகாவில் 22 லோக்சபா தொகுதிகளுக்கு மேல் நாங்கள் கைப்பற்றுவோம்' என்று தெரிவித்தார். 

தற்போது மாநிலத்தில், பாஜக வசம் 16 நாடாளுமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. காங்கிரஸிடம் 10 தொகுதிகள் மற்றும் 2 இடங்கள் மதச்சார்பற்ற ஜனதா தளத்திடம் உள்ளது. 

நேற்று எதிர்கட்சித் தலைவர்கள் டெல்லியில் சந்தித்து இந்தியா - பாகிஸ்தான் இடையில் நிலவி வரும் பதற்றமான சூழல் குறித்து, ‘ஆளுங்கட்சி இந்த விவகாரத்தை அரசியல் ஆதாயத்துக்காக செய்து வருகிறது' என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியது. அதற்கு சான்றாக அமைந்துள்ளது எடியூரப்பாவின் கருத்து.
 

 

இந்த விவகாரம் குறித்து கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் சித்தராமையா, ‘பாஜக-வுக்கு ஒரு அசிங்கமும் இல்லை. மொத்த நாடும் பதற்றமாக இருக்கிறது. நமது பைலட் ஒருவர் பாகிஸ்தான் பிடியில் இருக்கிறார். ஆனால் பாஜக, எத்தனை தொகுதிகளை ஜெயிக்கலாம் என்று கணக்குப் போடுகிறது. மிகக் கீழ்த்தரமான அரசியல் இது' என்று கடுமையாக சாடியுள்ளார். 

புல்வாமா தாக்குதலில் 40 துணை ராணுவத்தினர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லையில் உள்ள தீவிரவாத முகாம்களில் இரு தினங்களுக்கு முன்னர் தாக்குதல் நடத்தியது.

செவ்வாய் கிழமை அதிகாலை 3.30 மணிக்கு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 12 மிராஜ் 2000 என்ற ஜெட் போர் விமானம் 1,000 கிலோ எடை கொண்டு வெடிகுண்டுகளை தீவிரவாத முகாம்கள் மீது வீசியுள்ளது.

சர்ஜிகல் ஸ்ட்ரைக்கை போன்று நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் 100 சதவிகிதம் வெற்றிகரமாக முடிந்தது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

 

மேலும் படிக்க - ‘மேலும் ராணுவ நடவடிக்கை பிரச்னையை பெரிதாக்கும்!'- அமெரிக்கா கருத்து

.