This Article is From Sep 16, 2019

Hindi Push: “கன்னடத்தை விட்டுக்கொடுக்க முடியாது…”- அமித்ஷாவை எதிர்க்கிறாரா எடியூரப்பா?

தற்போது நாட்டை ஒன்றிணைக்கும் திறன் வாய்ந்த மொழி ஒன்று உண்டென்றால், அது நாடு முழுவதும் பரவலாக பேசப்படும் இந்தி மொழிதான்: Amit Shah

Hindi Push: “கன்னடத்தை விட்டுக்கொடுக்க முடியாது…”- அமித்ஷாவை எதிர்க்கிறாரா எடியூரப்பா?

“கன்னடத்துக்கான முக்கியத்துவத்தை ஒருநாளும் விட்டுத் தர முடியாது” - எடியூரப்பா

Bengaluru:

'இந்திய நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும்' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சில நாட்கள் முன்னர் கூறிய கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், கர்நாடக முதல்வரும் பாஜக-வின் மூத்த நிர்வாகிகளில் ஒருவருமான எடியூரப்பா, “கன்னடத்துக்கான முக்கியத்துவத்தை ஒருநாளும் விட்டுத் தர முடியாது” என்று பேசியுள்ளார். 

முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்வீட்டர் பதிவில், ‘இந்தியாவில் பல மொழிகள் உள்ளன. ஒவ்வொரு மொழியும் தனிச் சிறப்பு வாய்ந்தவை. ஆனால், உலகளவில் இந்தியாவின் அடையாளமாக ஒரு பொதுமொழி இருக்க வேண்டியது அவசியம். 

தற்போது நாட்டை ஒன்றிணைக்கும் திறன் வாய்ந்த மொழி ஒன்று உண்டென்றால், அது நாடு முழுவதும் பரவலாக பேசப்படும் இந்தி மொழிதான். எனவே, அதை தேசிய மொழியாக்க வேண்டும். மகாத்மா காந்தி, சர்தார் படேல் ஆகியோரின் கனவை நிறைவேற்ற இந்திய மக்கள் தங்கள் தாய் மொழியையும், இந்தியையும் முன்னேற்ற வேண்டும் என நான் விரும்புகிறேன்,' எனக் கூறியிருந்தார்.

இந்த விவகாரம் குறித்து எடியூரப்பா தனது ட்விட்டர் பக்கத்தில், “நமது நாட்டில் இருக்கும் அனைத்து அதிகாரபூர்வ மொழிகளும் முக்கியத்துவம் வாய்ந்தவைதான். அதே நேரத்தில் கர்நாடகத்தைப் பொறுத்தவரை, கன்னடம்தான் பிரதான மொழி. அதில் எந்த சமரசத்துக்கும் இடமில்லை. அதன் முக்கியத்துவத்தை குறைக்க வாய்ப்பே இல்லை” என்று உறுதிபட தெரிவித்துள்ளார். 

அமித்ஷா-வின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், ‘பல ராஜாக்கள் தங்கள் ராஜ்யங்களை விட்டுக்கொடுத்து உருவானதுதான் இந்தியா. ஆனால் விட்டுக் கொடுக்க முடியாது என்று உறுதியாக பல இந்தியர்கள் பல மாநிலங்கள் சொன்ன விஷயம் எங்கள் மொழியும் கலாசாரமும் என்பதுதான்.

இந்தியா, குடியரசான போது அதே சத்தியத்தை அரசு மக்களுக்குச் செய்தது. அந்த சத்தியத்தை திடீரென்று எந்த ஷாவோ, சுல்தானோ, சாம்ராடோ மாற்றிவிட முயற்சிக்கக் கூடாது. ஜல்லிக்கட்டு போராட்டம் என்பது ஒரு சிறிய போராட்டம், சிறிய வெற்றி. எங்கள் மொழிக்காக நாங்கள் போராடத் துவங்கினால், அது அதைவிட பன்மடங்கு பெரிதாக இருக்கும் அந்த ஆபத்து இந்தியாவிற்கோ, தமிழ்நாட்டிற்கோ தேவையற்றது' என்றார். 


 

.