This Article is From Mar 07, 2020

யெஸ் பேங்க் விவகாரம்!! காங். ஆட்சியில்தான் பிரச்சினை ஆரம்பித்ததாக நிதியமைச்சர் குற்றச்சாட்டு!

2004 - 2014 காங்கிரஸ் ஆட்சிக்காலத்தின்போது அரசின் தவறான அணுகுமுறையால்தான் இன்றைக்கு மத்திய பாஜக அரசு சிக்கலைச் சந்தித்து வருகிறது என்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

Advertisement
இந்தியா Edited by

Highlights

  • யெஸ் பேங் பிரச்னைக்கு காங்கிரஸே மூல காரணம் என்கிறார் நிர்மலா
  • ராகுலும், சிதம்பரமும் மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்திருந்தனர்
  • யெஸ் பேங்கில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு விதிப்பு
New Delhi:

கடன் சுமையால் தள்ளாடும் யெஸ் பேங்க்கின் நிர்வாகத்தை ரிசர்வ் வங்கி கையில் எடுத்திருக்கும் சூழலில், இந்த விவகாரம் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தின்போதுதான் ஆரம்பித்தது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார். 

இதுதொடர்பாக இன்று அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது -

எதிர்க்கட்சிகள் என் மீது புகார் தெரிவிப்பதற்கு ஆர்வமாக உள்ளன. நான் அவர்களைக் குற்றம் சாட்ட விரும்பவில்லை. ஆனால் அப்படிச் செய்வதற்கு என்னிடம் காரணங்கள் உள்ளன. 

Advertisement

2004 - 2014-ல் காங்கிரஸ் மத்தியில் 10 ஆண்டுகள் ஆட்சி செய்தது. அப்போது காங்கிரஸ் அரசு மேற்கொண்ட தவறான அணுகுமுறைதான் இன்றைக்கு பாஜக அரசு பிரச்சினைகளைச் சந்திப்பதற்கு முக்கிய காரணம். 

2014 பாஜக ஆட்சிக்கு வருவதற்குச் சற்று முன்புதான் யெஸ் பேங்க்கின் சிக்கல்களை, அனில் அம்பானி குழுமம், டி.எச்.எப்.எல்., ஐ.எல்.எப்.எஸ்., போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் உணர்ந்தன. அவர்கள் யெஸ் பேங்க் என்பது வங்கியே இல்லை என்று தெரிவித்தனர். 

Advertisement

இவ்வாறு நிதியமைச்சர் சீதாராமன் தெரிவித்தார். அமைச்சர் தனது பேட்டியில் எதிர்க்கட்சி தலைவர்கள் பெயரைக் குறிப்பிடவில்லை. ஆனால், அவர் ராகுல் காந்தி மற்றும் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்தைச் சூசகமாகக் குறிப்பிட்டார் என்று நாம் யூகிக்கலாம். 

முன்னதாக ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், 'நோ எஸ் பேங்க். பிரதமர் மோடியின் யோசனைகள் நாட்டின் பொருளாதாரத்தை அழித்து விட்டன' என்று குற்றம் சாட்டியிருந்தார். 

Advertisement

முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் தனது ட்விட்டர் பதிவில், 'யெஸ் பேங்க் விவகாரம் என்பது மத்திய அரசு நிர்வாகத்தில் முழு தோல்வி அடைந்து விட்டது என்பதைக் காட்டுகிறது. ஆனால் முந்தைய காங்கிரஸ் அரசு மீது குற்றம் சாட்டி மத்திய அமைச்சர் அறிக்கை விடுவார். அதே நேரத்தில் வங்கிக் கடன் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 55,633 கோடியிலிருந்து ரூ. 2,41,499 கோடியாக எப்படி அதிகரித்தது என்பதை மட்டும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்க வேண்டும்.

யாருக்குத் தெரியும்! வங்கிக் கடன் அதிகரித்ததற்கு நிதியமைச்சர் காங்கிரஸ் அரசைத்தான் குறை கூறுவார்' என்று குறிப்பிட்டுள்ளார். 

Advertisement