This Article is From Mar 06, 2020

பணம் எடுக்கக் கட்டுப்பாடு; ஏடிஎம் விரைந்த வாடிக்கையாளர்கள் கடும் திண்டாட்டம்!

Yes Bank: பணம் எடுக்க ஆர்பிஐ கட்டுப்பாடு விதித்துள்ளதால், வாடிக்கையாளர்கள் ரூ.50,000க்கு மேல் பணம் எடுக்க வேண்டுமென்றால், அவர் கடும் சிரமத்திற்கு உள்ளாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பணம் எடுக்கக் கட்டுப்பாடு; ஏடிஎம் விரைந்த வாடிக்கையாளர்கள் கடும் திண்டாட்டம்!

வங்கி எங்களுக்கு முன்கூட்டியே எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என்கிறார் யெஸ் பேங்க் வாடிக்கையாளர்.

ஹைலைட்ஸ்

  • யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள் கடும் திண்டாட்டம்
  • ரூ.50,000 வரை மட்டுமே பணம் எடுக்க முடியும்
  • ரிசர்வ் வங்கி கட்டுபாட்டில் யெஸ் வங்கி
Mumbai:

கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் தனியார் வங்கியான யெஸ் வங்கியின் நிர்வாகத்தை, ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து, வாடிக்கையாளர்கள் ரூ.50,000க்கு மேல் பணம் எடுக்க முடியாது என்ற கட்டுப்பாடுகளை விதித்தது. 

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, மும்பையில் யெஸ் வங்கியில் டெபாசிட் செய்தவர்கள் தங்களது பணத்தை எடுக்க ஏடிஎம் நோக்கி விரைந்தனர். 

எனினும், எடிஎம்-ல் பணம் இல்லை என்றும், யெஸ் வங்கி எங்களுக்கு முன்கூட்டியே எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என்றும் வாடிக்கையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

மறு உத்தரவு வரும் வரை யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள் ரூ.50,000 வரை மட்டுமே பணம் எடுக்க அனுமதிக்கப்படுகிறார்கள். அவசர தேவைகளுக்கு ரிசர்வ் வங்கியின் அனுமதியுடன் ரூ.50,000க்கும் மேல் பணம் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக யெஸ் வங்கி வாடிக்கையாளர் நந்த குமார் என்பவர் கூறும்போது, பொதுமக்கள் பலர் தங்களது பணத்தை எடுக்க ஏடிஎம் விரைந்துள்ளதால், எடிஎம்-ல் தற்போது பணம் இல்லை. வங்கி என்பது பொது மக்களால் நம்பிக்கையான ஒன்றாக பார்க்கப்பட்டது. 

ஆனால், இனி மக்களுக்கு அதன் மீதான நம்பிக்கை குறைந்துவிடும். ஆர்பிஐ இது போன்ற நடவடிக்கைகளை அவ்வப்போது எடுத்து வருகிறது. இதில், சாதாரண மனிதனின் குற்றம் தான் என்ன? வங்கி எங்களிடம் முன்கூட்டியே எதையும் தெரிவிக்காதது ஏன் என ஆதங்கத்துடன் கேள்வி எழுப்புகிறார். 

வங்கி ஊழியர்கள் மற்றும் பிற உறுப்பினர்கள் எப்போதும், பொதுமக்களிடம் அதிகமாக டெபாசிட் செய்யக் கூறி வலியுறுத்துகின்றனர். ஆனால், யெஸ் வங்கி வாடிக்கையாளர்களைத் தவறாக வழிநடத்திவிட்டது என்றார். 

இதேபோல், மற்றொரு வாடிக்கையாளர் கூறும்போது, ஹோலி பண்டிகை வரும் நேரத்தில் இது போன்ற கட்டுப்பாடுகளைக் கொண்டுவருவது மிகவும் தவறானது. இதனால், நாங்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவோம். இதுதொடர்பாக வங்கி எங்களுக்கு முன்கூட்டியே எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. எனது வங்கிக் கணக்கில் தற்போது ரூ.2 லட்சம் உள்ளது. எனக்கு ரூ.1.5 லட்சம் தேவைப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலைகளில் பொதுமக்கள் என்ன செய்வது? என்று அவர் கேள்வி எழுப்பினார். 

.