நேற்றைய தினம் லண்டன் செல்ல முயன்ற ராணா கபூரின் மகள் ரோஷினி கபூர் மும்பை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்.
ஹைலைட்ஸ்
- ராணா கபூர் மகள் மற்றும் மனைவி மீது சிபிஐ வழக்குப்பதிவு!
- லண்டன் செல்ல முயன்ற ராணா கபூரின் மகள் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்
- அமலாக்கத்துறை விசாரணையில் ராணா கபூர்
New Delhi: யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் மீது சிபிஐ நேற்றைய தினம் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், இன்று அவரது மனைவி மற்றும் மகள் லஞ்சம் வாங்கிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் நான்காவது பெரிய தனியார் கடன் வழங்குநரான யெஸ் வங்கி ஏற்படுத்தியுள்ள பெரும் நெருக்கடி குறித்த விசாரணையின் நடுவே, நேற்றைய தினம் ரோஷினி கபூர் லண்டன் செல்ல முயன்ற நிலையில், மும்பை விமான நிலையத்தில் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார்.
ராணா கபூரை வரும் புதன்கிழமை வரை அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அவரின் மகள் ரோஷினி கபூர் மற்றும் இதர குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்றைய தினம் பணமோசடி குற்றச்சாட்டில் ராணா கபூர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து மும்பையில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் நீதிமன்றம் அவர் அமலாக்க இயக்குநரகத்தின் விசாரணைக்கு அனுப்பப்பட்டார்.
DHFL நிறுவனத்தின் ரூ.3,700 கோடி மதிப்புள்ள கடன் பத்திரங்களை யெஸ் வங்கி வாங்கியதுடன். இதற்குப் பிரதிபலனாக ராணா கபூரின் மூன்று மகள்களுக்கு ரோஷ்னி கபூர், ராக்கி கபூர் டாண்டன் மற்றும் ராதா கபூருக்கு சொந்தமான டொயிட் என்கிற நிறுவனத்திற்கு ரூ.600 கோடியை DHFL நிறுவனம் கடன் வழங்கியது என்றும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது.
மும்பையில் உள்ள யெஸ் வங்கியின் நிறுவனர் ராணா கபூருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
நடத்தியது. அதன்பிறகு சனிக்கிழமை அதிகாலை அவரை கைது செய்தது. சுமார் 4,500 கோடி ரூபாய் அளவில் முறைகேடு நடந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
யெஸ் வங்கியின் கட்டுப்பாட்டை தற்போது ரிசர்வ் வங்கி எடுத்துக்கொண்டது. தொடர்ந்து, யெஸ் வங்கியின் 49 சதவீத பங்குகளை வாங்க நிதி முதலீடு செய்யப்போவதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கடந்த வாரம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், திவாலான திவான் ஹவுசிங் அண்ட் ஃபைனான்ஸ் லிமிடெட் (DHFL) உள்ளிட்ட நிறுவனங்களுக்கு யெஸ் வங்கிக் கடன் வழங்கியுள்ளதைச் சுட்டிக்காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திவான் ஹவுசிங், பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியின் மீது ரிசர்வ் வங்கி மேற்கொண்ட கட்டுப்பாடு நடவடிக்கைகளைத் தொடர்ந்து, கடந்த ஆறு மாதங்களில் வெளிவந்த மூன்றாவது குறிப்பிடத்தக்க இந்திய நிதி நிறுவனம் யெஸ் வங்கி ஆகும்.