லாலுவின் மகன்கள் தேஜஸ்வி மற்றும் தேஜ்பிரதாப்.
Patna: பீகார் மாநில அரசியலில் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு மாட்டுத் தீவன முறைகேடு வழக்கில் 14 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
ஐ.ஆர்.சி.டி.சி. முறைகேடு தொடர்பான வழக்கில் லாலு மனைவி ராப்ரி தேவி மற்று தேஜஸ்வி ஆகியோருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. இவ்வாறு பலவிதமான சர்ச்சைகள் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியை சுற்றி வருகின்றன.
இந்த நிலையில், லாலுவின் மூத்த மகளும், மாநிலங்களவை உறுப்பினருமான மிசா பாரதி பரபரப்பான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். கட்சி மற்றும் குடும்ப நிலைமை குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், எனது சகோதரர்கள் தேஜஸ்வி மற்றும் தேஜ் பிரதாப் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பது உண்மைதான். ஆனால், ராஷ்டிரிய ஜனதா தளம் என்பது மிகப்பெரிய கட்சி. இதுபோன்ற கருத்து வேறுபாடுகளை நாங்கள் எதிர்கொள்வோம். தற்காலத்தில், இந்த மாதிரியான பிரச்னைகள் எழுவது சர்வ சாதாரணம்தான் என்று கூறியுள்ளார்.
29 வயதாகும் தேஜஸ்வி, லாலு பிரசாத்தின் அரசியல் வாரிசாக கருதப்பட்டு வருகிறார். முன்பு ஒருமுறை பேட்டியளித்த லாலு பிரசாத், தேஜஸ்வி மற்றும் தேஜ் பிரதாபுக்கு இடையே சண்டை ஏற்படுவது கட்சியின் நிலைமையை மோசமாக்கி விடும் என்று எச்சரித்திருந்தார்.
இருவரும் கடநத் ஆண்டு இறுதிவரைக்கும் பீகார் அமைச்சர்களாக இருந்து வந்தனர். ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ் குமார் கூட்டணியை உடைத்ததால், லாலு மகன்களின் பதவி பறிபோனது.