Yeti: எட்டியின் கால்தடங்கள் இந்திய ராணுவத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
ஹைலைட்ஸ்
- மகாலு அடிவாரத்தில் ’எட்டி’ கால்தடம் காணப்பட்டதாக ராணுவம் தகவல்
- ஒரு காலுக்கான தடம் மட்டுமே அந்த புகைப்படத்தில் தெரிகிறது.
- எட்டி உள்ளது என பலர் கூறிய போதிலும் ஆதாரம் இல்லாமல் இருந்தது.
New Delhi: நேபாளத்தில் இமயமலையின் அடிவாரத்தில் "எட்டி"(Yeti) எனப்படும் பனி மனிதனின் கால் தடத்தை கண்டதாக ராணுவ வீரர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்திய ராணுவத்தின் இந்த தகவல், 'டின் டின் இன் திபெத்' என்ற பிரபல கார்ட்டூன் தொடரை நினைவுப்படுத்தும் வகையில் உள்ளது.
'எட்டி' (Yeti) எனப்படும் ராட்சத பனி மனிதன் இருப்பதாக பல வருடங்களாக கூறப்பட்டு வந்த நிலையில், அதனை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில், மர்மமான கால்தடங்களை இந்திய ராணுவத்தினர் கண்டுள்ளனர்.
இதுகுறித்து இந்திய ராணுவம் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ள பதிவில், 32 அங்குல நீளமும் 15 அங்குல அகலமும் கொண்ட அளவிலான 'மர்மமான கால்தடத்தை' (Yeti footprint) ராணுவ வீரர்கள் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த ஏப்.9ஆம் தேதி நேபாளத்தில் உள்ள மகாலு அடிவாரத்தில் பனி மனிதனின் கால்தடம் காணப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், பனி மனிதன் மகாலு - பாருன் தேசிய பூங்கா அருகில் ஏற்கனவே காணப்பட்டதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும், எட்டி குறித்த புகைப்பட மற்றும் வீடியோ ஆதாரங்கள் உள்ளதாகவும், அது வெளியாகும் போது அனைவருக்கும் நிச்சயம் ஆச்சரியம் அளிக்கும் என்று ராணுவ தகவல்கள் கூறுகின்றன.