This Article is From May 18, 2020

உ.பி. தொழிலாளர்களை மீட்க வெளி மாநிலங்களுக்கு 12,000 பேருந்துகள் அனுப்பப்படுகின்றன!!

தொழிலாளர்களை மீட்பது தொடர்பாக வெளி மாநிலங்களில் இருக்கும் உத்தரப்பிரதேச தொழிலாளர்களின் பட்டியலை அளிக்குமாறு மற்ற மாநிலங்களுக்கு உத்தரப்பிரதேச அரசு கடிதம் அனுப்பியுள்ளது. 

உ.பி. தொழிலாளர்களை மீட்க வெளி மாநிலங்களுக்கு 12,000 பேருந்துகள் அனுப்பப்படுகின்றன!!

தற்போது வரை 590 சிறப்பு ரயில்களை உத்தரப்பிரதேச அரசு முன்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

New Delhi:

பொது முடக்கம் காரணமாக வெளி மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் உத்தரப்பிரதேச தொழிலாளர்களை மீட்பதற்காக 12 ஆயிரம் பேருந்துகளை உத்தரப்பிரதேச போக்குவரத்து துறை அனுப்புவதற்கு முடிவு செய்துள்ளது. 

தொழிலாளர்களை மீட்பது தொடர்பாக வெளி மாநிலங்களில் இருக்கும் உத்தரப்பிரதேச தொழிலாளர்களின் பட்டியலை அளிக்குமாறு மற்ற மாநிலங்களுக்கு உத்தரப்பிரதேச அரசு கடிதம் அனுப்பியுள்ளது. 

வெளி மாநிலங்களில் இருந்து உத்தரப்பிரதேசத்திற்கு வரும் தொழிலாளர்களுக்கு தேவையான உணவு, குடிநீரை ஏற்பாடு செய்யும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

மேலும், தொழிலாளர்கள் நடைபயணமாகவோ, இரு சக்கர வாகனத்திலோ, சரக்கு லாரிகள், சட்ட விரோதமான முறையிலோ மாநிலத்திற்கு வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அவர்களுக்காக பேருந்து மற்றும் ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக உத்தரப்பிரதேச அரசு தெரிவித்திருக்கிறது. 

தற்போது வரை 590 சிறப்பு ரயில்களை உத்தரப்பிரதேச அரசு முன்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முன்னதாக ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வெளி மாநில தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு பேருந்துகள் உத்தரப்பிரதேச எல்லைக்குள் வருவதற்கு மாநில அரசு அனுமதி அளித்தது. காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான  விவரங்கள் உத்தரப்பிரதேச அரசிடம் இருந்து பிரியங்கா காந்தியின் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

சில தினங்களுக்கு முன்பாக உத்தரப்பிரதேச மாநிலம் ஆரேயாவில் வெளி மாநில தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 24 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 36 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. 

வெளிமாநிலத்தில் பணிபுரியும் உத்தரப்பிரதேச தொழிலாளர்களை அழைத்து வர பிரியங்கா காந்தி ஏற்பாடு செய்திருந்தார். இதற்காக பக்கத்து மாநிலங்களில் இருந்து சுமார் ஆயிரம் பேருந்துகளில் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பினர். ஆனால் பேருந்துகள் மாநில எல்லையில் நிறுத்தப்பட்டிருந்தன. உள்ளே வர அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில், பிரியங்கா காந்தி ட்விட்டர் மூலமாக உத்தரப்பிரதேச அரசுக்கு கோரிக்கை வைத்தார். அவர் தனது ட்விட்டர் பதிவில், 'மரியாதைக்குரிய முதல்வர் அவர்களே, அரசியல் செய்வதற்கான நேரம் இதுவல்ல. நாங்கள் ஏற்பாடு செய்த பேருந்து உத்தரப்பிரதேச எல்லையில் நிற்கிறது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உண்ண உணவு, குடிக்க தண்ணீர் இல்லாமல் உத்தரப்பிரதேசத்திற்கு நடந்து வந்து கொண்டிருக்கிறார்கள். எனவே பேருந்துகள் உள்ளே வருவதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.' என்று கூறியிருந்தார்.

இதையடுத்து பேருந்துகள் உத்தரப்பிரதேசத்திற்குள் வருவதற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் அனுமதி அளித்திருக்கிறார். 

.