This Article is From Nov 11, 2018

’சரியென்று நினைத்ததை செய்தோம்!- பெயர் மாற்றும் படலம் குறித்து யோகி ஆதித்யநாத்

பாஜக உறுப்பினர்கள் பலர் இன்னும் பல இடங்களுக்குப் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று கோரி வருகின்றனர்

சமீபத்தில் அலகாபாத் மற்றும் ஃபயிஸாபாத்துக்கு உ.பி அரசு பெயர் மாற்றம் செய்தது.

ஹைலைட்ஸ்

  • ஆதித்யநாத், அரசின் நடவடிக்கைக்கு நியாயம் கற்பித்துள்ளார்.
  • ஆக்ராவுக்கும், முஸாஃபர்நகருக்கும் பெயர் மாற்ற கோரிக்கை எழுந்துள்ளது
  • பாஜக கூட்டணி கட்சிகளையே இந்நடவடிக்கை விமர்சித்துள்ளன
Lucknow:

உத்தர பிரதேசத்தில் இருக்கும் பல நகரங்களுக்கு தொடர்ந்து பெயர் மாற்றி வருகிறது முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான மாநில அரசு. இந்த பெயர் மாற்றும் படலம், சர்ச்சைக்கு உள்ளாகி வரும் நிலையில், அது குறித்து கருத்து தெரிவித்துள்ளார் ஆதித்யநாத்.

அவர், ‘எங்களுக்கு மனதில் எது நல்லது என்று பட்டதோ அதைச் செய்தோம். முகல் சாராய் என்றிருந்த பெயரை பண்டித் தீன தயாள் உபாத்யாய் நகர் என்று பெயர் மாற்றினோம். அலகாபாத்தை பிரயாக்ராஜ் என்றும், ஃபயிஸாபாத்தை ஆயோத்யா என்றும் பெயர் மாற்றினோம். எங்கு பெயர் மாற்றத்துக்கான தேவை உள்ளதோ, அங்கு தேவையான நடவடிக்கையை உத்தர பிரதேச அரசு எடுக்கும்' என்று கூறியுள்ளார்.

உ.பி அரசு சில இடங்களுக்குப் பெயர் மாற்றம் குறித்து அறிவித்துள்ள நிலையில், பாஜக உறுப்பினர்கள் பலர் இன்னும் பல இடங்களுக்குப் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று கோரி வருகின்றனர்.

பாஜக எம்.பி ஜெகன் பிரசாத் கார்க், ‘ஆக்ராவுக்கு அக்ரவன் அல்லது அக்ரவால் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும்' என்கிறார். இன்னொரு பாஜக மக்கள் பிரதிநிதியான சங்கீத் சோமோ, ‘முசாஃபர்நகருக்கு உடனடியாக லக்ஷ்மி நகர் என்று பெயர் மாற்றிட வேண்டும்' என்று வலியுறுத்தி வருகிறார்.

இந்த பெயர் மாற்றும் நடவடிக்கைக் குறித்து எதிர்கட்சிகள் மட்டுமல்ல, உத்தர பிரதேசத்தில் பாஜக கூட்டணி கட்சியான எம்.பி.எஸ்.பி-யே விமர்சனம் செய்துள்ளது. அந்தக் கட்சி, 'மக்களின் உண்மையான பிரச்னைகளைத் தீர்க்காமல் இதைப் போன்று நடவடிக்கையில் ஈடுபடுவது திசைத் திருப்பும் உத்தியாகும். பாஜக, அவர்கள் கட்சியில் இருக்கும் முஸ்லிம்களின் பெயர்களை முதலில் மாற்றட்டும். அதன் பிறகு இடங்களுக்கு பெயர் மாற்றம் செய்யலாம்' என்றுள்ளது.

அதேபோல சிவசேனா கட்சி, ‘பாஜக, ராமர் கோயில் கட்டுவதாக வாக்குறுதி கொடுத்திருந்தது. ஆனால், தற்போது அவர்கள், இடங்களுக்கு பெயர் மாற்றி வருகின்றனர். ராமருக்கு சிலை வைக்கப் போவதாக சொல்கின்றனர். தேர்தல் நெருங்கும் சமயத்தில் இதைப் போன்று அறிவிப்புகள் எடுபடாது' என்று விமர்சித்துள்ளது.

.