This Article is From Oct 01, 2018

போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட ஆப்பிள் அதிகாரியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த யோகி!

விவேக் திவாரியின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட ஆப்பிள் நிறுவன அதிகாரியின் குடும்பத்தினரை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இன்று நேரில் சந்தித்தார்

Lucknow:

உத்தரபிரதேச மாநிலம், லக்னோவில் போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட ஆப்பிள் நிறுவன அதிகாரி விவேக் திவாரியின் குடும்பத்தினரை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இன்று நேரில் சந்தித்தார்.

உத்தரபிரதேச துணை முதல்வர் தினேஷ் ஷர்மா, விவேக் திவாரியின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினரை அழைத்து கொண்டு முதல்வர் இல்லம் சென்றார். அங்கு முதல்வர் யோகி ஆதித்யாநாத் விவேக் திவாரியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பானது சுமார் 25 நிமிடங்கள் நடந்தது.

இதைத்தொடர்ந்து, விவேக் திவாரியின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சமும், அவரது குழந்தைகள் கல்வி செலவுகளுக்கு ரூ.5 லட்சமும், அவரது வயதான தாயாருக்கு ரூ.5 லட்சம் என மொத்தம் ரூ.35 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து விவேக் திவாரியின் மனைவி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, நான் ஏற்கனவே கூறியது போல் மாநில அரசு மீது அதிக நம்பிக்கை கொண்டுள்ளேன். அதனை உறுதிப்படுத்தும் வகையில் இன்று முதல்வர் என்னிடம் தேவையான உதவிகளை செய்வதாக உறுதியளித்துள்ளார்.

முன்னதாக மூத்த அமைச்சர் ஒருவர், போலீஸ் உயர் அதிகாரிகள் விவேக் திவாரியின் கொலை வழக்கை கைது செய்யப்பட்ட 2 காவலர்களை வைத்தே மூடி மறைக்க நினைப்பதாக கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் நேற்று 2 மணி நேரத்திற்கு மேலாக சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

விவேக் திவாரி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.

.