This Article is From May 15, 2020

'அம்மாவின் பிள்ளை வேஷம் போட்டு தப்பிக்க முடியாது' - அதிமுகவை தாக்கும் கமல்

தமிழகத்தில் மதுக்கடைகளை திறப்பதற்கு தடை விதித்து உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நாளை முதல் தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்கப்படவுள்ளன.

'அம்மாவின் பிள்ளை வேஷம் போட்டு தப்பிக்க முடியாது' - அதிமுகவை தாக்கும் கமல்

மதுக்கடைகள் திறக்கப்படுவதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

''மதுக்கடைகளை மூடியதற்கு தமிழகமெங்குமுள்ள தாய்க்குலம் வாழ்த்துச் சொன்னது. திறந்ததற்கான தீர்ப்பை அதே தாய்க்குலம் சொல்லும், மிக விரைவில். அப்போது நீங்கள் அம்மாவின் பிள்ளை வேஷம் போட்டுத் தப்பிக்க முடியாது.'' என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன், அதிமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். 

மதுபானக்கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை டாஸ்மாக் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிவப்பு மண்டலங்களை தவிர்த்து மற்ற அனைத்து பகுதிகளிலும் டாஸ்மாக் திறக்கப்படுகிறது. 550 பேர் மட்டுமே வரிசையில் நிற்பதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். மற்றவர்களுக்கு டோக்கன் வழங்கப்படும். தனிநபர் இடைவெளியுடன் விற்பனை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் விற்பனை தொடர்பான வழக்கை 2 மாதங்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளதால் இன்னும் 2 மாதங்களுக்கு தடையின்றி டாஸ்மாக் செயல்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில், மதுக்கடைகளை திறப்பதற்கு அவசரம் காட்டிய அதிமுக அரசை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், ''மதுக்கடைகளை மூடியதற்கு தமிழகமெங்குமுள்ள தாய்க்குலம் வாழ்த்துச் சொன்னது. திறந்ததற்கான தீர்ப்பை அதே தாய்க்குலம் சொல்லும், மிக விரைவில். அப்போது நீங்கள் அம்மாவின் பிள்ளை வேஷம் போட்டுத் தப்பிக்க முடியாது.'' என்று கூறியுள்ளார்.

இதற்கு முன்னதான தனது ட்விட்டர் பதிவில் அவர், ''உயர் நீதிமன்றத்தில் பதிலளிக்க அவகாசம் வேண்டும் என்று இழுத்தடித்து, உச்ச நீதிமன்றத்தில் இடைகாலத்தடை வாங்கி விட்டது தமிழக அரசு. மக்கள் நலனில் என்றுமில்லாத உத்வேகத்தை, மதுக்கடை திறப்பில் காட்டும் இந்த அரசுக்கு தீர்ப்பு வழங்க, இனி மக்களே, நீதி மய்யமாக மாற வேண்டிய நேரம் வந்து விட்டது.'' என்று கூறியிருந்தார். 

தமிழகத்தை நாளை டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கான ஏற்பாடுகளில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். 

.