பிரதமர் நரேந்திர மோடி, “ஐ.என்.எஸ் விராட் போர் கப்பலை தனது குடும்ப சுற்றுலாவுக்காக பயன்படுத்தியவர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி” என்று பேசியுள்ளார்
New Delhi: பிரதமர் நரேந்திர மோடி, “ஐ.என்.எஸ் விராட் போர் கப்பலை தனது குடும்ப சுற்றுலாவுக்காக பயன்படுத்தியவர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி” என்று பேசியுள்ளதற்கு, காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் தரப்பு, “இந்திய விமானப் படை ஜெட்களை, தேர்தலுக்காக தனது டாக்சி போல பயன்படுத்தி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. அதுவும் 744 ரூபாய் வாடகைக்கு” என விமர்சித்துள்ளது.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா இது குறித்து இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ஊடகங்களில் வெளியான ஆர்.டி.ஐ அறிக்கை ஒன்றை சுட்டிக்காட்டி, “பிரதமராகிய நீங்கள் இந்திய விமானப் படையின் ஜெட்களை உங்களது டாக்சி போல பயன்படுத்தியுள்ளீர்கள். அதவும் 744 ரூபாய் வாடகைக்கு” என்று பேசியுள்ளார்.
ஊடகங்களில் வெளியான இது தொடர்பான அறிக்கையில், பிரதமர் மோடிக்காக பாஜக, இந்திய விமானப்படை ஜெட்களை 240 முறை வாடகைக்கு எடுத்துள்ளது என்றும், இந்த மொத்த பயணத்துக்கும் 1.4 கோடி ரூபாய் கொடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று டெல்லியில் நடந்த பரப்புரைக் கூட்டத்தின் போது பிரதமர் மோடி, “ராஜீவ் காந்தி, தனக்கும் தனது குடும்பத்திற்காகவும் ஐ.என்.எஸ் விராட் போர் கப்பலை பயன்படுத்தியுள்ளார். குடும்ப சுற்றுலாவுக்காக அதை அவர் செய்துள்ளார். ஒரு தீவில் ராஜீவ் காந்தி ஓய்வெடுப்பதற்காக ஐஎன்எஸ் விராட் பயன்படுத்தப்பட்டது. அந்தத் தீவுக்கு அருகேயே ஐஎன்எஸ் விராட் நிறுத்திவைக்கப்பட்டது.” என்று பேசினார்.
இது குறித்து நேற்றே பதிலளித்த காங்கிரஸ், “ஓய்வு பெற்ற துணை அட்மிரல் வினோத் பஸ்ரிசா இது குறித்து தெளிவுபடுத்திவிட்டார். ராஜீவ் காந்தி, அரசு வேலைக்காத்தான் ஐஎன்எஸ் விராட் கப்பலை பயன்படுத்தினார். இந்த உண்மை குறித்தெல்லாம் மோடிக்கு கவலை இல்லை. மோடி, எதையும் சாதிக்கவில்லை என்பதால், இப்படியெல்லாம் பேசி வருகிறார்” என்று தெரிவித்தது.