முன்னதாக, மத்திய அமைச்சரவை பொறுப்பேற்றபோது, அதிமுகவை சேர்ந்த ரவீந்திரநாத்துக்கு அமைச்சர் பதவி கிடைக்கலாம் என்ற பேச்சு இருந்தது. ஆனால், அமைச்சரவையில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.
இதுகுறித்து, துக்ளக் இதழில் வெளியிட்ட ஒரு கார்ட்டூன் சர்ச்சையை ஏற்படுத்தியது. பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் அறைக்குள் அமர்ந்து விருந்து சாப்பிட்டுக்கொண்டிருக்க வெளியே ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி உள்ளிட்ட அதிமுகவினர் காத்து நிற்பது போல வரையப்பட்டு, ‘உஸ்ஸ்... யாரும் அழப்படாது. நம்மளையெல்லாம் உள்ள கூப்பிட மாட்டாங்க. கடைசியா ஏதாவது மீந்துச்சுன்னா குடுப்பாங்க. அப்ப சாப்பிடலாம்' என்ற வாசகங்களை அதிமுகவினரே சொல்வது போல துக்ளக் குறிப்பிட்டிருருந்தது.
இதைத்தொர்ந்து, துக்ளக் பத்திரிகையின் விமர்சனத்திற்கு, நமது அம்மா நாளிதழ் இன்று பதிலடி கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில், ‘தரங்கெட்ட பத்திரிகையும்..தரம் தாழ்ந்த விமர்சனமும்.. தலைப்பின் கீழ் துக்ளக் பத்திரிக்கையை கடுமையாக விமர்சித்தது.
மேலும், துக்ளக் பத்திரிகை தொடர்ந்து கழகத்தையும், கழகத்தின் அமைச்சர்களையும் தரம் தாழ்ந்து விமர்சித்து வருகிறது. சோ நடத்திய பாரம்பரியமிக்க பத்திரிகை இப்போது நாளெல்லாம் பெட்டிக்கடைகளில் வாசிப்பதற்கு ஆள் இல்லாது தூக்கில் தொங்குகிற துர்நாற்ற பத்திரிகையாக மாறிவிட்டது என்பதைத் தான் காட்டுகிறது என்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக-வை விமர்சனம் செய்வதை குருமூர்த்தி நிறுத்திக் கொள்ள வேண்டும். அவர் காழ்புணர்ச்சியோடு ஏன் செயல்படுகிறார் என்று தெரியவில்லை என விமர்சனம் செய்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இருமொழிக் கொள்கைதான் எங்கள் உயிர் என்றும், தமிழை வைத்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள் நாங்கள் அல்ல என்றும் கூறியுள்ளார்.