ஜான்சனை ஒரு போராளி என்று பாராட்டியுள்ளார் மோடி.
New Delhi: கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து பிரதமர் நலம் பெற வேண்டும் என்று பிரதமர் மோடி பிரார்த்தித்துள்ளார். இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அவர், வீடியோ கான்பரன்சிங் மூலமாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டு வருகிறார்.
இந்த நிலையில், ஜான்சனை போராளி என்று பாராட்டி பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-
அன்புள்ள போரிஸ் ஜான்சன். நீங்கள் ஒரு போராளி. இந்த சவாலை நீங்கள் சிறப்பாக எதிர்கொண்டு வெல்வீர்கள்.
நீங்கள் நலம்பெறுவதற்கும், மீண்டு வந்து ஆரோக்கியமான இங்கிலாந்தை உறுதி செய்வதற்கும் நான் பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு மோடி தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.
.
நேற்று முன்தினம் இங்கிலாந்து இளவரசரும், ராணி இரண்டாம் எலிசபெத்தின் மூத்த மகனுமான சார்லஸுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியிருக்கிறது.
இதுகுறித்து போரிஸ் தனது ட்விட்டர் பதிவில், 'கடந்த 24 மணி நேரமாக எனக்கு கொரோனா பாதிப்புக்கான அறிகுறிகள் காணப்பட்டன. இப்போது நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். இருப்பினும் வீடியோ கான்பரன்சிங் மூலமாக கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை நான் வழி நடத்துவேன். நாம் ஒன்றிணைந்து இந்த கொரோனாவை விரட்டி அடிப்போம். உயிர்களை காக்க வீட்டிலேயே இருங்கள்' என்று கூறியுள்ளார்.
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 5.50 லட்சமாகவும், பலியானோரின் எண்ணிக்கை 24, 871 ஆகவும் உள்ளது.
இங்கிலாந்தில் மொத்தம் 11,658 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 578 பேர் உயிரிழந்துள்ளனர்.