அலிபாபா ஆண்ட் பைனான்சியலின் ஆதரவுடன் செயல்படும் சொமேட்டோ, இந்தியாவில் ஊபர் ஈட்ஸை 350 மில்லியன் டாலருக்கு விலைக்கு வாங்கியுள்ளது.
New Delhi: பங்கு ஒப்பந்த அடிப்படையில் ஊபர் டெக்னாலஜிஸ் இன்க்ஸ்-ன் இந்திய உணவு விநியோக பிரிவை வாங்க சம்மதித்ததாகவும், இதற்காக சொமேட்டோவின் பங்குகளில் 10 சதவீத பங்குகளை ஊபருக்கு வழங்குவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொமேட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்த மதிப்பானது, சுமார் 350 மில்லியன் டாலர் அல்லது ரூ.2492 கோடியாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஊபர் டெக்னாலஜிஸ் இன்க்ஸ்-ன் நிறுவனம் தனது உணவு விநியோக வணிகமான ஊபர் ஈட்ஸ் சேவையை
கடந்த 2017ம் ஆண்டில் இந்தியாவில் தொடங்கியது. எனினும், இந்தியாவில் தனது விற்பனையை பெருக்க ஊபர் மிகவும் சிரமப்பட்டது. இதற்கு முக்கிய காரணமாக சொமேட்டோவும், மற்றும் பிற உள்ளூர் போட்டியாளர்களான ஸ்விக்கியும் இந்திய உணவு விநியோக சந்தையில் செலுத்திய பெரும் ஆதிக்கமே ஊபர் ஈட்ஸின் பின்னடைவுக்கு முக்கிய காரணமாக இருந்து வந்தது.
முன்னணி உணவகத்தை கொண்டுள்ளதிலும், இந்தியாவில் 500க்கும் மேற்பட்ட நகரங்களில் ஒரு முன்னணி உணவு விநியோகத்தை வணிகத்தை உருவாக்கியதிலும் நாங்கள் பெருமையடைகிறோம். இந்த கையகப்படுத்தல் எங்களது நிலையை கணிசமாக வலுப்படுத்துகிறது என்று சொமேட்டோ நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான தீபிந்தர் கோயல் தெரிவித்துள்ளார்.
ஊபர் ஈட்ஸ் இந்தியாவில் தனது செயல்பாடுகளை நிறுத்தியுள்ளது. தொடர்ந்து, ஊபருடன் தொடர்பில் இருந்த நேரடி உணவகங்கள், டெலிவரி பார்ட்னர்கள் மற்றும் பயனாளர்கள் இனி சொமேட்டோ நிறுவனத்துடன் உடனடியாக இணைக்கப்படுவார்கள் என்றும், ஏற்கனவே ஊபர் ஈட்ஸ் அப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் சொமேட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் ஊபர் ஈட்ஸ் குழு, நம்பமுடியாத அளவிலான சாதனையை செய்துள்ளது என்று ஊபர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தாரா கோஸ்ரோசாஹி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறும்போது, இந்தியா ஊபருக்கு எப்போதும் முக்கியமான விதிவிலக்கான சந்தையாகவே இருக்கிறது. தொடர்ந்து எங்கள் கால்டாக்சி வணிகத்தை வளர்ப்பதில் நாங்கள் தொடர்ந்து முதலீடு செய்வோம் என்று அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ஊபர் ஈட்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் சொமேட்டோ ஊபர் ஈட்ஸை வாங்கியதாக அறிவித்துள்ளோம். இதனால், இந்தியாவில் ஊபர் ஈட்ஸில் இருந்து நீங்கள் இனி ஆர்டர் செய்ய முடியாது. எனினும், ஊபர் ஈட்ஸில் நீங்கள் பெற்ற உங்களுக்கு பிடித்தமான உணவை இனி நீங்கள் சொமேட்டோவிலும் அனுபவிக்க முடியும் சொமேட்டோ உங்களுக்கு வழங்ககும் அற்புதமாக சலுகைகளுடன்.
அதேபோல், நீங்கள் தொடர்ந்து, ஊபர் அப் மூலம் கால்டாக்சி சேவையை பெறலாம். அந்த சேவை தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும். இந்தியாவுக்கு வெளியே நீங்கள் பயணம் செய்கிறீர்கள் என்றால் ஊபர் ஈட்ஸ் அப்பை பயன்படுத்தலாம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
(இன்றைய டாலர் மதிப்பு: $1 = ரூ. 71.19)
(Inputs from Reuters)