தங்களது நிறுவனத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க ஜொமேட்டோ ஊழியர்கள், வீதிக்கு வந்து போராட்டம் செய்துள்ளார்கள்.
ஹைலைட்ஸ்
- கொல்கத்தாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது
- 'எங்கள் கோரிக்கைக்கு ஜொமேட்டோ செவி மடுக்கவில்லை'
- இந்த கோரிக்கையை ஏற்க முடியாது: ஜொமேட்டோ
Howrah: கொல்கத்தாவில் இருக்கும் ஜொமேட்டோ டெலிவரி ஊழியர்கள், மாட்டுக்கறியோ பன்றிக்கறியோ டெலிவரி செய்ய மாட்டோம் என்று கூறியுள்ளனர். மேலும், இந்த விவகாரம் தொடர்ந்தால், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் கூறியுள்ளனர். தங்களது நிறுவனத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க ஜொமேட்டோ ஊழியர்கள், வீதிக்கு வந்து போராட்டம் செய்துள்ளார்கள்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள், ‘இந்து ஊழியர்கள், மாட்டுக் கறி உணவை டெலிவரி செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளார்கள். முஸ்லிம் ஊழியர்கள், பன்றிக்கறி உணவை டெலிவரி செய்ய முடியாது என்று உறுதியாக இருக்கிறார்கள்' என்று கூறியுள்ளார்கள்.
மவுசின் அக்தர் என்கிற ஒரு ஊழியர், “எங்களது கோரிக்கையை ஜொமேட்டோ மதிக்கவில்லை. எங்கள் விருப்பத்தை மீறி மாட்டுக்களி மற்றும் பன்றிக்கறியை டெலிவரி செய்யச் சொல்கிறார்கள். மாட்டிறைச்சியை டெலிவரி செய்வதில் இந்துக்களுக்கு பிரச்னை உள்ளது. பன்றிக் கறியை டெலிவரி செய்வதில் முஸ்லிம்களுக்குப் பிரச்னை உள்ளது. அதைப் போன்ற உணவுகளை எந்த வித சூழலிலும் டெலிவரி செய்ய நாங்கள் விரும்பவில்லை. ஆனால், அப்படித்தான் நடக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.
“எங்களது மத உணர்வில் அவர்கள் விளையாடுகிறார்கள். இந்துக்களான எங்களை மாட்டிறைச்சி டெலிவரி செய்யச் சொல்கிறார்கள். முஸ்லிம் சகோதரர்களை பன்றிக் கறி டெலிவரி செய்யச் சொல்கிறார்கள். இது ஏற்புடையதல்ல” என்று இன்னொரு ஊழியர் கூறுகிறார்.
இது குறித்து ஜொமேட்டோ நிறுவனம், “இந்தியா போன்ற பன்முகத் தன்மை வாய்ந்த ஒரு நாட்டில், சைவம் அசைவத்தைப் பிரித்து டெலிவரி செய்யும் வேலைகளை வகுக்க முடியாது. டெலிவரி ஊழியர்கள், தங்களது பணி குறித்து புரிந்து செயல்பட வேண்டும். இது குறித்து அனைவரும் புரிந்து கொண்டனர். ஹவுராவில் இருக்கும் ஒரு சிறிய குழு மட்டும்தான் இதில் விலகியிருக்கிறார்கள். அதை சரி செய்ய பார்த்து வருகிறோம்” என்று விளக்கம் கொடுத்துள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்துதான் இந்தப் போராட்டமும் வெடித்துள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு பாஜக தலைமையிலான அரசு, நாடு முழுவதும் பசுவதை செய்வதற்குத் தடை விதித்ததைத் தொடர்ந்து மாட்டிறைச்சி என்பது விவாதப் பொருளானது. பாஜக, ஆளும் மாநிலங்கள் மாடுகளைப் பாதுகாக்கத் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “மிகவும் ஜனநாயக விரோத சட்ட சாசனத்துக்கு எதிரான முடிவு இது. மேற்கு வங்கத்தில் பசுவதை செய்யவோ மாட்டிறைச்சி உண்ணவோ எந்த தடையும் இருக்காது” என்று கூறினார்.
மேற்கு வங்க அரசியல் களத்தில் தற்போது மம்தா தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸுக்கும், அமித்ஷா தலைமையிலான பாஜக-வுக்கும் தான் நேரடி போட்டி நிலவுகிறது. இதனால், இந்த ‘மாட்டிறைச்சி விவகாரம்' பெரிதாக வாய்ப்புள்ளது.
ANI தகவல்களுடன் எழுதப்பட்டது