ஜெர்மனி, தைவான் நாடுகள் ஜூம் செயலிக்கு தடை விதித்துள்ளன.
ஹைலைட்ஸ்
- ஊரடங்கால் மக்கள் அலுவலகம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது
- அலுவலகங்களில் பணிபுரிவோர், அதிகாரிகள் ஜும் ஆப்பை பயன்படுத்துகின்றனர்
- ஜூம் ஆப் பாதுகாப்பானது அல்ல என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது
New Delhi: வீடியோ கான்பரன்சிங்கிற்கு பயன்படுத்தப்படும் ஜூம் செயலி பாதுகாப்பானது அல்ல என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் பலரது தகவல்கள் திருடப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக அரசு கூறியுள்ளது.
நாடு முழுவதும் மே 3-ம்தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக வீட்டிலிருந்து பணி புரிவோர், அரசு அதிகாரிகள் என பல்வேறு தரப்பினர் வீடியோ கான்பரன்சிங்கை பயன்படுத்தும் கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர்.
அந்த வகையில் வீடியோ கான்பரன்சிங்கிற்காக ஜூம் என்ற செயலி அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. இதனைப் பயன்படுத்தி தகவல்கள் திருடப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில், ஜூம் செயலி பாதுகாப்பானது அல்ல என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், 'தனிநபர்கள் பயன்படுத்துவதற்கு கூட ஜூம் செயலி பாதுகாப்பானது அல்ல. இதுதொடர்பாக ஏற்கனவே மத்திய அரசு விளக்கம் அளித்திருந்தது. ஜூம் செயலி மூலம் வீடியோ கான்பரன்சிங்கில் இருப்பவர்கள் மற்றவர்களின் தகவல்களை திருட அதிக வாய்ப்பு உள்ளது.
ஜூம் செயலில் உள்ள பெரும்பாலான அமைப்புகள், பயனாளி லாக் இன் செய்தால் மட்டுமே செயல்படும் வகையில் உள்ளது. ஆனால் சில அம்சங்கள், செயலி தவறாகப் பயன்படுத்த அதிக வாய்ப்பை ஏற்படுத்தி தருகின்றன. பாதுகாப்பு மற்றும் அந்தரங்க விஷயங்கள் என இரண்டிலும் ஜூம் ஆப் நம்பகத்தன்மையை ஏற்படுத்தவில்லை' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் சைபர் பாதுகாப்பு பிரிவு உயர் அதிகாரிகள் கூறுகையில், 'முன்னணி வர்த்தக நிறுவனங்கள், வீடுகள் மற்றும் அரசு அலுவலகங்களில் ஜூம் செயலியை பயன்படுத்தக் கூடாது. இது நம்பகத்தன்மை வாய்ந்த செயலி அல்ல' என்று தெரிவித்துள்ளார்.
கூகுள் நிறுவனம் தனது ஊழியர்கள் அனைவரும் ஜூம் செயலியை பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளது. சிங்கப்பூரில் இந்த செயலியை பயன்படுத்தி ஆசிரியர்கள் வகுப்பெடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனி, தைவானிலும் ஜூமுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.