நேற்று பாலகோட் பகுதியில் இருந்த தீவிரவாத முகாம்களை குண்டு போட்டு தாக்கியதைத் தொடர்ந்து பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டை மீறி வருகிறது. இதனால் இரு நாட்டுக்கும் இடையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இன்று இரு நாட்டு விமானப் படைகளுக்கும் இடையில் சண்டை நடந்தது. இந்த சண்டையின்போது, ஒரு இந்திய விமானி காணாமல் போயுள்ளதாக இந்திய அரசு தரப்பு தகவல் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் விமானப்படை, இந்திய ராணுவத் தளவாடங்களை குறிவைத்துத் தாக்க எத்தனித்தபோது, அதற்கு பதிலடி கொடுத்தது இந்தியா. அப்போதுதான் விமானி மாயமாகியுள்ளார்.
இப்படிப்பட்ட சூழலில் இன்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ‘இந்தியா பாகிஸ்தான், இரு நாடுகளும் நிலவும் பிரச்னையை பேசி சுமூகமாக தீர்த்துக் கொள்ள வேண்டும். போர் வரலாற்றைப் பார்த்தால், எல்லாமே தவறான கணக்கால்தான் ஆரம்பித்திருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும். போரை ஆரம்பிப்பவர்கள் அது எங்கு முடியும் என்பதை உணர மாட்டார்கள். இப்போது நான் இந்தியாவை ஒரு கேள்வி கேட்கிறேன், உங்களிடமும் எங்களிடமும் இருக்கும் ஆயுதங்களை வைத்து தவறான கணக்கு போட முடியுமா?’ என்றுள்ளார்.