ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருக்கும் ப.சிதம்பரம் இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியில் தன்மீதான விமர்சனங்களுக்கு நேற்று பதிலளித்து விட்டு வீட்டிற்கு சென்ற முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த காத்துக் கொண்டிருந்தனர். அவர் கைது செய்யப்படலாம் என தகவல்கள் பரவியதால் காங்கிரஸ் தொண்டர்கள் சிதம்பரம் வீட்டின் முன்பு குவிந்திருந்தனர். முன்னதாக சிதம்பரத்தின் வீட்டின் கதவை அதிகாரிகள் தட்டியபோது, அதனை திறக்கவில்லை என்று கூறப்பட்டது. இதையடுத்து வீட்டின் சுவர் ஏறிக்குதித்து விசாரணை அதிகாரிகள் உள்ளே சென்றனர்.