காஷ்மீரில் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி கடந்த வாரம் திடீரென மத்திய அரசு ராணுவ படைகளின் எண்ணிக்கையை அதிகரித்தது. ஆயிரக்கணக்கான பாதுகாப்பு படை வீரர்கள் காஷ்மீர் முழுவதும் குவிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று வரையில் 35 ஆயிரம் வீரர்கள் கூடுதலாக குவிக்கப்பட்டு உள்ளனர். காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை சீர்குலைப்பதற்காக பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து, இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்தாலும், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுமா? அல்லது மாநிலம் மூன்றாக பிரிக்கப்படுமா? என்ற பெரும் சந்தேகம் நிலவி வருகிறது. இதனால் காஷ்மீரில் தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவி வருகிறது.