மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம், பாஜக கோட்டையான குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று நடைபெற்றது. இதில் மக்களவை தேர்தலை எதிர்கொள்வது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
இந்தக் கூட்டத்திற்கு பின்னர் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பிரியங்கா காந்தி பேசியதாவது-
ஓட்டுதான் உங்கள் ஆயுதம். சரியான முடிவை நீங்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். உங்களிடம் வாக்கு கேட்டு வருபவர்களிடம் கேள்வி கேளுங்கள். நன்றாக யோசித்து முடிவு எடுங்கள்.
முன்பு உங்களிடம் வந்து வாக்கு கேட்டவர்கள் என்னவெல்லாம் சொன்னார்கள் என்பதை எண்ணிப் பாருங்கள். ரூ. 15 லட்சத்தை வங்கிக் கணக்கில் போடுவோம் என்றார்களே?. பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்போம் என்று வாக்குறுதி அளித்தார்களே?. அதுவெல்லாம் என்ன ஆனது?.
இந்த நாடு உங்கள் நாடு. நாட்டை நீங்கள்தான் காக்க வேண்டும். மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகி உள்ளோம். அனைத்து மட்டங்களிலும் பாஜக வெறுப்புணர்வை விதைத்துள்ளது.
இவ்வாறு பிரியங்கா பேசினார். மக்களவை தேர்தலையொட்டி பிரியங்கா காந்தி நேரடி அரசியலில் களம் இறக்கப்பட்டுள்ளார். அவர் உத்தர பிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதி பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கீழ் 40 மக்களவை தொகுதிகள் வருகின்றன.