பாஜக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் பலத்தை நிரூபிக்கும் வகையில் இன்றைய நிகழ்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜகவின் மூத்த தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களான பிகார் முதல்வர் நிதிஷ் குமார், சிவசேனா தலைவர் உதவ் தாக்கரே, ராம்விலாஸ் பஸ்வான் உள்ளிட்டோர் பிரதமர் மோடியுடன் வேட்புமனு தாக்கலின் போது உடன் பங்கேற்க உள்ளனர்.
இதில் அதிமுகவை சேர்ந்தவர்களும் பங்கேற்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காகே நேற்றைய தினமே தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், அவரது மகன் ரவீந்தரநாத்தும் வாரணாசி சென்றுள்ளனர். முன்னதாக, வேட்பு மனு தாக்கலுக்கு முன்பாக பாஜக தொண்டர்கள் மத்தியிலான பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு மோடி பேசவுள்ளார்.
இதனிடையே, வாரணாசியில் நேற்று பிரமாண்ட பேரணி நடத்திய பிரதமர் நரேந்திர மோடி, கங்கை நதியில் நடைபெற்ற ஆரத்தி நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், பயங்கரவாதத்துக்கு எதிராக புதிய இந்தியா உரிய பதிலடி கொடுத்து வருகிறது எனக் கூறினார். புல்வாமாவில் இந்திய வீரர்கள் 40 பேரை பயங்கரவாதிகள் கொன்றனர் என்றும், அதற்கு பதிலடியாக அதே பகுதியில் 42 பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டிருப்பதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.
வாரணாசி தொகுதி மக்களுக்கு கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் இந்த ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்றி விட்டதாக தம்மால் கூற முடியாது என தெரிவித்த மோடி, ஆனால், அதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளும், வளர்ச்சித் திட்டங்களும் சரியான திசையில் சென்றுக் கொண்டிருப்பதாக கூறினார். கடந்த ஐந்து ஆண்டு ஆட்சியில் உண்மையான முயற்சிகள் எடுக்கப்பட்டதாகவும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும் என்றும் பிரதமர் கூறினார்.
கடந்த 2014 தேர்தலில் வாரணாசியில் போட்டியிட்ட பிரதமர் மோடியை எதிர்த்து, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலும் போட்டியிட்டார். காங்கிரஸ் சார்பில் அஜய் ராய் போட்டியிட்டார். இதில் அஜய் ராய் 3ஆவது இடம்பெற்றார். பிரதமர் மோடி, 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலை வென்றார். காங்கிரஸ் வேட்பாளர் வெறும் 75,000 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார்.