சில நாட்களுக்கு முன்பு திமுக வேட்பாளரின் அலுவலகத்தில் அதிகளவு பணம் கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து, வேலூரில் தேர்தல் நடத்தப்படுவது என்பது கேள்விக்குறியாகி உள்ளது. இங்கு தேர்தல் நடத்தப்படுமா அல்லது நிறுத்தி வைக்கப்படுமா என்பது குறித்து குடியரசு தலைவர் இறுதி முடிவு எடுப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வேலூர் மக்களவை தொகுதியில் திமுக சார்பாக பொருளாளர் துரை முருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். துரை முருகனின் வீட்டில் கடந்த மார்ச் 30-ம்தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில் ரூ. 10.5 லட்சம் பணம் கைப்பற்றறப்பட்டது. அடுத்த 2 நாட்களுக்கு பின்னர் மொத்தம் ரூ. 11.53 கோடி பணம் வேலூரில் உள்ள துரை முருகனுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக வேட்பு மனு பிரமாண பத்திரத்தில் தவறான தகவல்களை அளித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கதிர் ஆனந்த் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தி, தேர்தல் ஆணையம் சார்பாக குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் வேலூரில் தேர்தல் நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதுகுறித்து நாளை முடிவு தெரிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.